Published : 26 Nov 2022 06:00 PM
Last Updated : 26 Nov 2022 06:00 PM
சென்னை: மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள், இம்மாதம் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். குறிப்பாக, டிசம்பர் 31 வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமும் இன்றி ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி செலுத்தலாம். அதற்கு எவ்வித இடையூறும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டும், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது தமிழகத்தில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலங்களிலும் வருகின்ற 28.11.2022 திங்கட்கிழமை முதல் 31.12.2022 வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும்.
டிச.31 வரை மின் கட்டணத்துக்கு கட்டாயம் அல்ல: பொதுமக்கள் இந்த தருணத்தினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்கள் மூலம் தங்களது மின் இணைப்பு எண்ணிணை ஆதாருடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 31.12.2022 வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமும் இன்றி ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி செலுத்தலாம். அதற்கு எவ்வித இடையூறும் இல்லை.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது ஏற்கெனவே பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு மின் நுகர்வோர்களின் தொலைபேசி எண்களை மின் இணைப்புடன் இணைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளை பெற்றிருக்கும் மின் நுகர்வோர்கள் பற்றிய விவரங்களை புதுப்பிக்கும் பொருட்டு அவர்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு ஆதாரை இணைக்கும்பொழுது தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் கிடைக்கப் பெறுவதோடு, ஏற்கெனவே பெயர் மாற்றம் செய்யப்படாமல் இறந்து போன / பழைய மின் இணைப்பு உரிமைதாரர்களின் பெயர்களில் இருக்கும் மின் இணைப்புகளை தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்களுக்கு தகுந்த ஆவணங்களின்படி பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. இதனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு மின் இணைப்பு உரிமையாளர்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் கிடைக்கப்பெறும்.
மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதினால் வீடுகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அதேபோன்று, கைத்தறி மற்றும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்படும். ஆதாரை இணைப்பதினால் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தவிப்பு: முன்னதாக, நுகர்வோரின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மின்நுகர்வோர் பலரும் மின்வாரிய இணையதளத்துக்கு சென்று, தங்கள் மின்இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. இதன் காரணமாக ஆதார் எண்ணை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன், மின்கட்டணத்தையும் கட்ட முடியாததால், பலரும் சிரமத்துக்கு ஆளாகினர். ஏராளமானோர் தங்கள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலக கவுன்ட்டர்களிலும் நேற்று குவிந்தனர். இதனால், மின்வாரியத்தின் இணையதள சேவை முடங்கியது.
இதுகுறித்து மின்நுகர்வோர் சிலர் கூறியபோது, “மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆன்லைனில் கடந்த 4 நாட்களாக முயன்றும், இணைக்க முடியவில்லை. நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தால், இணையதள சர்வர் டவுன் ஆகிவிட்டது என்று கூறி, சிறிது நேரம் கழித்து வருமாறு திருப்பி அனுப்பி அலைக்கழிக்கின்றனர்.
தவிர, இணைப்பு பணிக்கு சராசரியாக ஒரு நபருக்கு குறைந்தபட்சம் அரை மணி முதல் முக்கால் மணி வரை ஆகிறது. இதனால், மணிக்கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது. தவிர, அவசர அவசரமாக ஆதார் எண்ணை இணைப்பதால் நுகர்வோருக்கு பல்வேறு சந்தேகம் எழுகிறது. ஆதார் எண்ணை இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் வரையிலான மானியம் ரத்தாகுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை அவகாசம் வழங்க வேண்டும்” என்றனர். இந்தச் சூழலில், மேற்கண்ட அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது கவனத்துக்குரியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT