Published : 26 Nov 2022 02:36 PM
Last Updated : 26 Nov 2022 02:36 PM
சென்னை: சென்னையில் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை 100 மீட்டர் தொலைவுக்கு முன்னரே அறிவிக்கும் புதிய வசதி இப்போது 150 சென்னை மாநகரப் பேருந்துகளில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பு மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே அறிந்துகொள்ளும் வகையிலான திட்டம் முதற்கட்டமாக 150 பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிறுத்த ஒலிப் பெருக்கி அறிவிப்பு, அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்னரே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிக்கப்படும். இதனால், பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தை எளிதில் அறிந்துகொண்டு எவ்வித சிரமம் இன்றியும், கால தாமதமின்றியும் பேருந்திலிருந்து இறங்கிட ஏதுவாக இருக்கும்.
மேலும், இந்த தானியங்கி ஒலி அறிவிப்பு, பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதிகள் கொண்ட பேருந்துகள் சென்னையில் இன்று (நவ.26) தொடங்கி வைக்கப்பட்டது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பேருந்துகளை துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மேற்கொண்டு கூடுதலாக 1,000 பேருந்துகளில் செயல்படுத்த சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT