Published : 26 Nov 2022 11:59 AM
Last Updated : 26 Nov 2022 11:59 AM
சென்னை: தமிழக அரசின் இலவசப் பேருந்து பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.888 சேமிப்பதாக தமிழக திட்டக் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்தத் திட்டம், மே 8-ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலுரும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் 5ம் தேதி வரை 176.84 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாள் ஒன்று சராசரியாக 39.21 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த இலவசப் பேருந்து பயணம் மூலம் பெண்களுக்கு, ஒரு மாதத்திற்கு சராசரியாக 888 ரூபாய் மிச்சம் ஆவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடர்பாக மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (நவ.26) வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அதிகம் உள்ள நாகப்பட்டினம், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள திருப்பூர், தொழில்கள் மற்றும் சுற்றுலா அதிகம் உள்ள மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நேரடியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நாகையில் 416 பேர், மதுரையில் 422 பேர், திருப்பூரில் 437 பேர் என்று 1200 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் இலவச பேருந்து பயணம் காரணமாக பெண்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 888 ரூபாயை சேமிப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதன் மூலம் தினசரி போக்குவரத்து செலவுக்கு குடும்ப உறுப்பினர்களை நம்பி இருப்பது குறைந்துள்ளதாகவும், போக்குவரத்து செலவுகளில் மிச்சம் ஆகும் தொகையை வீட்டு செலவுக்கு பயன்படுத்தி கொள்வதும் தெரியவந்துள்ளது.
தகவல் ஆதாரம்: தி இந்து ஆங்கிலம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT