Published : 26 Nov 2022 05:40 AM
Last Updated : 26 Nov 2022 05:40 AM
சென்னை: தமிழகத்தில் 12 மாவட்ட சிறைகளில், ரூ.2.51 கோடியில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்துவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றம் செய்து, சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் மீதான குற்றத்தை சாட்சிகள் வாயிலாக நிரூபிக்கும் வகையில், சோதனை அணிவகுப்பு நடத்தப்படும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்ட, மத்திய சிறைகளில், நீதித் துறை நடுவர் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஒரு பகுதியிலும், அவர்களை குற்றவாளிகள் அடையாளம் காணாத வகையில் மற்றொரு பகுதியிலும் இருக்கும் வகையில் ஒருவழிக் கண்ணாடி தடுப்புடன் கூடிய தனி அறைகள் அமைக்கப்பட்டிருக்கும். அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச் சிறைகளில் இதுபோன்ற கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன.
தொடர்ந்து, 13 மாவட்ட சிறைகளில் இந்தக் கட்டிடத்தைக் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
அந்த வகையில் திண்டுக்கல், தூத்துக்குடி பேரூரணி, நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம்,சேலம் ஆத்தூர், விழுப்புரம் வேடம்பட்டு, ஈரோடு கோபி செட்டிப்பாளையம், நாகப்பட்டினம், தேனி, திருப்பூர் ஆகிய 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்டுள்ள, சோதனை அடையாள அணிவகுப்பு அறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்துவைத்தார். நாட்டிலேயே முதல் முறையாக, தமிழகத்தில்தான் மாவட்டச் சிறைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, சிறைத் துறை இயக்குநர் அமரேஷ் புஜாரி, காவலர் வீட்டு வசதிக் கழகத் தலைவர் அ.கா.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT