Published : 26 Nov 2022 05:47 AM
Last Updated : 26 Nov 2022 05:47 AM
சென்னை: தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் 24 வகையான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகளுக்கு டிச.23-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல விருதுகளை வழங்கிசிறப்பித்து வருகிறது. அவ்வகையில், தமிழக அரசின் 2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022-ம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது(3 விருதுகள்), பேரறிஞர் அண்ணாவிருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, தமிழ்த் தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறுப்புலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (10 விருதுகள்), சிங்காரவேலர் விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது, சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது, தமிழ்ச் செம்மல் விருதுகள் (38 விருதுகள் மாவட்டத்துக்கு ஒன்று வீதம்) உள்ளிட்ட 24 வகையான விருது வழங்கப்படவுள்ளது.
விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள், உரிய ஆவணங்களுடன் https://awards.tn.gov.in என்ற இணையவழி மூலமாகவோ அல்லது ‘இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை’ என்ற முகவரிக்கோ டிச. 23-ம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல்வர் விருது வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT