Published : 26 Nov 2022 05:54 AM
Last Updated : 26 Nov 2022 05:54 AM
சென்னை: ஆளுநர் கோரிய விளக்கங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் அரசு பதில் அளித்துள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு அவர் விரைவாக ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்வது, முறைப்படுத்துவது குறித்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த அக்.28-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதில் ஆளுநர் சில விளக்கங்களை கேட்டிருந்தார். ஆளுநர் கோரிய விளக்கம் மற்றும் அரசின் பதில் குறித்து, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 24-ம் தேதி காலை ஆளுநரிடம் இருந்து விளக்கம் கோரப்பட்டது. 24 மணிநேரத்துக்குள் அதாவது 25-ம் தேதி (நேற்று) காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் கோரிய விளக்கங்கள்: ஆளுநர் முதலாவதாக, ‘‘ஏற்கெனவே இதே பொருளில் பிறப்பிக்கப்பட்ட சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பில் உள்ள விஷயங்கள் இந்த சட்ட மசோதாவில் சரியாக பதில் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, வாய்ப்பு மற்றும் திறனுக்கான விளையாட்டு (கேம் ஆஃப் சான்ஸ் அண்டு ஸ்கில்) என்ற வித்தியாசம் இல்லாமல் முழுமையான தடை என்பது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்’’ என கூறியிருந்தார்.
இதற்கு அரசு தரப்பில், ‘‘அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ளபட்டியல் 2-ல் உள்ள 34. பந்தயம் மற்றும் சூதாட்டம், 1. பொது உத்தரவு, 6. பொது சுகாதாரம், 33. திரையரங்குகள் மற்றும் நாடக செயல்பாடுகள் ஆகிய உள்ளீடுகளை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் மாநிலப் பட்டியலில் உள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட்டு, அதன் அடிப்படையில்தான் இந்தச் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. எனவே, இந்த சட்டம் எந்தவகையிலும் அரசியலமைப்பின் கூறுகளுக்கு எதிராக இல்லை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே சட்ட மசோதா அமைந்துள்ளது’’ என்று கூறப்பட்டது.
இரண்டாவதாக, ‘‘திறமையின் அடிப்படையிலான விளையாட்டுகளை தடை செய்யும் முடிவு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள பட்டியல் 2-ல் உள்ள 34-வது கூற்றில் அமையும் என குறிப்பிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது கருத்தில் கொள்ளப்படவில்லை’’ என தெரிவித்திருந்தார்.
இதற்கு அரசு தரப்பில், ‘‘ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுகளை வித்தியாசப்படுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதைக் கருத்தில் கொண்டுதான் தற்போதைய அவசரச் சட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை மட்டும் தடை செய்வதற்கான சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது. முகப்புரையில் இதுகுறித்து தெளிவாகக் குறிப்பிட்டுதான் இந்த அவசர சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
மேலும், நேரில் (ஆஃப்லைனில்) விளையாடும்போது யாருடன் மற்றும் எவ்வாறு விளையாடுகிறோம் என்பது தெரிந்து விளையாட வாய்ப்புள்ளது. ஆனால், ஆன்லைனில் (இணையவழியில்) விளையாடும்போது, அந்த விளையாட்டை உருவாக்கியவர் எழுதும் செயல்திட்டத்தின் அடிப்படையில் விளையாடப்படுவதால், ஏமாற்றும் மற்றும் பணத்தை சுரண்டும் வாய்ப்புகள் உள்ளது என்பதன் அடிப்படையிலேயே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டது. எனவே, சூதாட்டம் என்ற அடிப்படையில் இது அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூறு 34-க்கு உட்பட்டுதான் இந்த சட்ட மசோதா அமைந்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவதாக, ‘‘குறிப்பிடத்தக்க அளவு தடை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதை மீறி இந்த தடை அமைந்துள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசு தரப்பில், ‘‘விளையாட்டுகள் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. ‘கேம் ஆஃப் சான்ஸ் அண்டு ஸ்கில்’ என்றுவித்தியாசப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, இது தேவையான அளவில் மட்டுமேயான தடைதான்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன காரணங்களுக்காக அந்தசட்டத்தை ஐகோர்ட்டு ரத்து செய்ததோ, அதற்கு பதிலாக புதிய சரத்துக்களை உள்ளடக்கி புதிய சட்டத்தை இயற்றியுள்ளோம். எங்களின் இந்த விளக்கத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டு சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தருவார் என்று எதிர்பார்க்கிறோம். இந்த சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் மிகச் சிறப்பாக நிறைவேற்றி மக்களைக் காப்பாற்றுவோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT