Published : 26 Nov 2022 07:15 AM
Last Updated : 26 Nov 2022 07:15 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஸ்ரீராமானுஜர் சிலை திறந்துவைக்கப்பட்டது. இது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர்நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
மனிதகுலத்துக்கும், ஆன்மிகத்துக்கும் ஸ்ரீராமானுஜர் ஆற்றிய அரும்பணிகளை விளக்கும் `ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவ விழா’ கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விழாவை நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.
2-ம் நாள் விழாவான நேற்று காலை ராமானுஜ நூற்றந்தாதி பாடல்கள் பாடப்பட்டன. ராமானுஜரின் சிலைக்கு, ஸ்ரீயதுகிரி யதிராஜ மடம் பீடாதிபதி ஸ்ரீநாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. பின்னர், பீடத்துடன் 8 அடி உயரம் கொண்ட ஸ்ரீராமானுஜர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிஅனுப்பிய வாழ்த்துச் செய்தி: கன்னியாகுமரியில் ராமானுஜர் சிலை திறக்கப்பட்டிருப்பது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஸ்ரீராமானுஜர் சிலையை நிறுவ யதுகிரி யதிராஜ மடம் மேற்கொண்ட முயற்சி உன்னதமானது.
பக்தி துறவி, தத்துவவாதி, சமூக சீர்திருத்தவாதியாக ஸ்ரீராமானுஜர் விளங்கினார். சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கும் நூல்களைப் படைத்தார்.
அவர் கூறியதுபோல, அனைத்து உயிரினங்களுக்கும் மதிப்பு என்பது சாதிகளால் அல்ல, நற்குணங்களால் அமைகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் காட்டிய பாதை, பாரதத்தின் பண்டைய அடையாளத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து அமிர்த மஹோத்சவவிழா கொண்டாடும் வேளையில், ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் உன்னத தியாகங்களை நினைவுகூரும் வேளையில், நமது கடந்தகால பாரம்பரியத்தில் இருந்தும் உத்வேகம் பெற்று, வலிமையை உருவாக்குவது மகிழ்ச்சியான நிகழ்வு.
அடுத்த 25 ஆண்டுகளில் புகழ்பெற்ற இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த விழாவில், விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன், கர்நாடக அமைச்சர் அஸ்வத் நாராயணன், தளவாய் சுந்தரம் எம்எல்ஏமற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT