Published : 26 Nov 2022 07:39 AM
Last Updated : 26 Nov 2022 07:39 AM
சென்னை: ரவுடிகளை கண்காணிக்கும் ‘ட்ராக் கேடி’ செயலியை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ‘ட்ராக் கேடி’ செயலியை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அறிமுகப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் விவரங்களை டிஜிட்டல்மயம் ஆக்குவதுதான் ‘ட்ராக்கேடி’ (TrackKD) செயலியின் முக்கிய நோக்கம்.இதன்மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை எளிதாக கண்காணிக்க முடியும்.
குற்றவாளிகள் மீதான குற்றப் பத்திரிக்கை விவரங்கள், ரவுடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டுள்ளனர், பிணை பத்திரங்களின் காலாவதி தொடர்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை வகைப்படுத்த முடியும். காவல் அதிகாரிகளுக்கு அவர்களது விரல் நுனியில் பல்வேறு முக்கிய விவரங்களை இச்செயலி வழங்கும்.
இந்த செயலியில், 39 மாவட்டங்கள், 9 ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திரப் பதிவேடுகள் டிஜிட்டல்மயம் ஆக்கப்பட்டுள்ளன. ரவுடிகளைகண்காணிப்பதோடு, பழிவாங்கும் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் சமூக விரோதச்செயல்கள், குற்றங்களை தடுக்கவும் உதவும்.
சட்டம்–ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான குழு இந்த செயலியை உருவாக்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT