Published : 21 Jul 2014 10:33 AM
Last Updated : 21 Jul 2014 10:33 AM
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மணல் கொள்ளையை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் கொசஸ்தலை ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க முயன்ற கனகராஜ் என்ற காவலரை மணல் கடத்தல் கும்பல் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்திருக்கிறது.
இது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மணல் கொள்ளையை தடுக்க முயலும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் தமிழகத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 150 கி.மீ. நீளத்திற்கு பாலாறு ஓடுகிறது. பாலாற்றிலும், கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட வேறு பல சிற்றாறுகளிலும் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் ஓடாது என்பதால், இதைப் பயன்படுத்திக் கொண்டு 365 நாட்களிலும் கடத்தல் கும்பல்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றன.
அரசால் அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் விதிகளை மீறி 50 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுகிறது. அரசால் அனுமதிக்கப்படாத பகுதிகளிலும் சட்ட விரோதமாக மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.
பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க பா.ம.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கீ.லோ. இளவழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மணல் அள்ளுவதற்காக சில விதிமுறைகளை வகுத்தது. ஆனால், அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு மணல் என்னும் இயற்கை வளத்தை கொள்ளையர்கள் சூறையாடிக்கொண்டிருகின்றனர்.
ஆளுங்கட்சி மற்றும் காவல்துறையின் முழு ஆதரவுடன் மணல் கொள்ளை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் வேலூர் மாவட்டத்திலிருந்து மட்டும் 300 முதல் 500 சரக்குந்துகளில் பெங்களூருக்கு ஆற்று மணல் கடத்திச் செல்லப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்கும் பொதுமக்கள் மிரட்டப்படுகிறார்கள். மணல் கடத்தலுக்கு ஆளுங்கட்சி நிர்வாகிகளும், காவல்துறை அதிகாரிகளும் துணையாக இருப்பதால் தான் காவலரையே கொலை செய்யும் அளவுக்கு கடத்தல் கும்பலுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்துக்கும், வட மாவட்டங்களிலிருந்து ஆந்திரம் மற்றும் கர்நாடகத்திற்கும் மணல் கடத்தப்படுகிறது.
ஆனால், கடத்தலை தடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும் வாய் மூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் எத்தனை முறை கண்டனம் தெரிவித்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மணல் கொள்ளைக்கு அரசு எந்திரங்கள் துணை போகின்றன. காவலர் கனகராஜ் கொல்லப்பட்டு 24 மணி நேரத்திற்கு மேலாகியும் அதற்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதிலிருந்தே மணல் கடத்தலை தடுப்பதிலும், அதற்காக பாடுபடுபவர்களை பாதுகாப்பதிலும் அரசும் காவல்துறையும் எவ்வளவு அக்கறை காட்டுகின்றன? என்பதை அறியலாம்.
இயற்கை வளத்தைக் காக்க வேண்டியது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. அதை மதித்து பாலாறு உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவலர் கனகராஜை கொலை செய்தவர்களை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT