Published : 21 Dec 2016 11:48 AM
Last Updated : 21 Dec 2016 11:48 AM

நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்யுங்கள்: நிலத்தடி நீர் குறைந்ததால் வேளாண் துறை அறிவுரை

தமிழகத்தில் மழை இல்லாமல் நிலத்தடி நீர் குறைந்ததால், விவசாயிகள் நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய தமிழ்நாடு வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் குறைவான மழை பொழிவுள்ள 2-வது மாநிலம் தமிழகம். அதுவும், தென் மாவட்டங்களில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பருவமழை குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் 10 முதல் 12 மழை நாட்கள் கிடைத்து வந்தது. கடந்த 6 ஆண்டாக 6 முதல் 7 மழை நாட்களே கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழையின்போது, 18 முதல் 21 மழை நாட்கள் கிடைத்து வந்தநிலையில், கடந்த 6 ஆண்டாக 8 முதல் 10 மழை நாட்களே கிடைத்தது. இதனால், மேட்டுப்பகுதி நிலங்களில் பெரும்பாலான மாதங்களில் பயிர் விளைச்சல் குறைந்து, குடிநீரின் தேவை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டை பொறுத்தவரையில், இந்நிலை மிகவும் மோசமாகி தற்போது வரை 2 மழை நாட்களே கிடைத்துள்ளன. இதனால், தமிழ்நாடு வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகள், விவசாயிகளுக்கு நீர் குறைந்தளவு தேவைப்படும் பயிர் வகைகளை சாகுபடி செய்ய அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் வேளாண்மைத்துறை பொறியாளர் பிரிட்டோராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை வெப்பச் சலனம் காரணமாக மட்டுமே அதிகளவு மழையும், பருவமழையால் குறைந்த மழையும் பெய்துள்ளது. தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. முறையான மழைநீர் சேகரிப்பு இல்லாததும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் வரும் ஆண்டில் கோடை காலத்தில் மக்களை மிகவும் அச்சுறுத்தும் நிலையில் நிலத்தடி நீர் மட்டம் உள்ளது. இதை பாதுகாத்தால் மட்டுமே, வரும் கோடை மாதங்களில் குடிநீர், விவசாயத் தேவைகளை நாம் சமாளிக்க முடியும். சமூகக் கல்வி பாடத் திட்டங்களில் குழந்தை பருவத்தில் இருந்தே மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரை வாளி தண்ணீரில் (12 லிட்டர்) குளிப்பதற்கு குழந்தைகளுக்கு பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில், குடிநீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதி காரிகள் முதல் குடிநீர் ஆபரேட்டர் வரை நீர் சிக்கன அவசியத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

குழாய் இணைப்புகள் உடைந்து நீர் அதிகப்படியாக வெளியேறினால், போர்க்கால அடிப்படையில் அதனை சரி செய்ய நிலையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.

உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் தினசரி பயன்படுத்தும் நீரை முறைப்படுத்தி, நீச்சல் குளங்களை உபயோகிப்பதை சிறிது காலத்துக்கு தடை செய்ய லாம். தனியார் குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவதை தவிர்க்கலாம். விவசாயிகள், நெல், கரும்பு, வாழை போன்ற நீர் தேவை அதிகமுள்ள பயிர்களை இனி வரும் காலங்களில் பயிரிடுவதை தவிர்க்கலாம். அதைவிட லாபகரமான சிறுதானியம், பயிர் வகைகள், பந்தல் காய்கறிகளை விவசாயம் செய்வதை தை, ஆடிப் பட்டங்களில் கடைப்பிடிக்கலாம். குளங்கள் நிரம்பினால் மட்டுமே கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் நிரம்பும். அதனால், புதிய ஆழ்துளை கிணறுகளை தவிர்க்க வேண்டும்.

நிலங்களில் பண்ணைக் குட்டை கள், அமுங்கு நீர் குட்டைகள், குழி எடுத்து வரப்பு எடுத்தல் பணிகளை செயல்படுத்திட வேண்டும். இறுதியாக மழைநீர் இல்லாதபோது, நிலத்தடி நீர் மட்டமே உயிர் நீர் என்ற எண்ணத்தை மக்கள் உணர்ந்தால் உலக சுகாதார நிறுவனம் கூறியதுபோல, 135 லிட்டர் கிடைக்காவிட்டாலும் குறைந்தபட்சம் 80 லிட்டர் தினசரி கிடைக்க வாய்ப்பு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x