Published : 25 Nov 2022 08:07 PM
Last Updated : 25 Nov 2022 08:07 PM
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான முக்கிய சாட்சியான சுவாதி, நீதித்துறை நடுவரிடம் அளித்த வாக்குமூலத்துக்கு நேர் எதிராக கூறியதால், ‘சாதி, மதம் முக்கியமல்ல, சத்தியம்தான் முக்கியம். இதனால் உண்மையைக் கூறுங்கள்’ என நீதிபதிகள் கூறினர்.
கோகுல்ராஜ் ஆணவக் கொலை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கலை சேர்ந்து வேறு சமூக பெண்ணுடன் பழகியுள்ளார். இருவரும் 23.6.2015-ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்துள்ளனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. மறுநாள் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேல்முறையீட்டு வழக்கு: கோகுராஜை ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 8-ல் தீர்ப்பளித்தது.யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். விடுதலையான 5 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா, சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆஜர்ப்படுத்த உத்தரவு: இந்த மனுக்கள் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய இளம் பெண் சுவாதியை (கோகுல்ராஜ் உடன் படித்தவர்) இன்று (நவ.25) உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சாட்சிக் கூண்டிற்கு செல்லாத சுவாதி: இந்நிலையில், மேல்முறையீடு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த்வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சுவாதியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் சுவாதிக்காக சாட்சிக் கூண்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சாட்சி கூண்டிற்கு செல்லாமல் நீதிபதிகள் முன்புள்ள இடத்தில் இருக்கையில் அமர்ந்தவாறு நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு சுவாதி பதிலளித்தார்.
கோகுல்ராஜ் தெரியுமா? - முன்னதாக சுவாதி, ‘நீதிமன்றத்தில் நான் சொல்வதெல்லாம் உண்மை’ என சத்தியம் செய்தார். அவரிடம், ‘மனசாட்சியை தொட்டு, குழந்தைகள் மீது சத்தியமாக உண்மையை சொல்வீர்கள் என நம்புகிறோம்’ என நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து சுவாதி, ‘எனக்கு 28 வயதாகிறது. திருமணமாகி கணவர், ஒரு குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பமாக இருக்கிறேன்’என்றார். கோகுல்ராஜ் தெரியுமா? என நீதிபதிகள் கேட்டதற்கு, ‘பொறியியல் கல்லூரியில் என்னுடன்தான் படித்தார். சகமாணவரைப் போல் கோகுல்ராஜை எனக்கு தெரியும். மற்ற மாணவர்களுடன் பேசுவதை போலவே அவருடன் பேசினேன்’ என்றார் சுவாதி.
அந்த பெண் நான் இல்லை... - பின்னர் சுவாதியிடம், 23.6.2015-ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கேமராவில் பதிவான காட்சி போடப்பட்டு, அந்தக் காட்சியில் இருக்கும் பெண் நீங்கள் தானா?, பக்கத்தில் இருப்பவர் யார்? என நிதிபதிகள் கேட்டனர்.அதற்கு, ‘வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. அந்த ஆண் கோகுல்ராஜ் போல் தெரிகிறது. அதை உறுதியாக சொல்ல முடியாது’ என்றார் சுவாதி. அவரிடம் நீதிபதிகள், ‘அதில் இருப்பது உங்களை போல் தெரிகிறது. இப்போது அது நான் இல்லை என்கிறீர்கள், குழந்தைகள் மீது உண்மையை சொல்வதாக சத்தியம் செய்துள்ளீர்கள். நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளிக்கும் போது, அந்த வீடியோவில் இருப்பது நான் தான் கூறியுள்ளீர்கள். இப்போது மாற்றி சொல்கிறீர்கள்’ என்றனர்.
போலீஸார் சொன்னதே செய்தேன்... - அதற்கு சுவாதி, ‘நான் உண்மையை தான் சொல்கிறேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். நீதித்துறை நடுவரிடம் போலீஸார் எழுதி கொடுத்ததை வாசித்தேன். எனக்கும், என் குடும்பத்துக்கும் எந்த ஆதரவும் இல்லை. இதனால் போலீஸார் சொல்வதை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்’ என்றார்.
நீதிபதிகள், ‘உங்களை போலீஸ் தரப்பில் அச்சுறுத்தினார்களா? குற்றவாளிகள் தப்பில் அச்சுறுத்தல் இருந்ததா? எனக் கேட்டனர். அதற்கு சுவாதி, ‘குற்றவாளிகள் தரப்பில் யாரும் மிரட்டவில்லை. போலீஸார் சொன்னதை செய்தேன்’ என்றார். பின்னர் நீதிபதிகள், ‘நீதிமன்றத்தில் பொய் சொல்லக்கூடாது. ஏற்கெனவே நிறைய தகவல்களை தெரிவித்துள்ளீர்கள். இப்போது மாற்றி சொல்கிறீர்கள்’ என்றனர். சம்பவத்தின்போது சுவாதியுடன் போலீஸார் ஒருவர் பேசுவது போன்ற குரல் பதிவை ஒலிபரப்பி, ‘அந்தக் குரல் பதிவில் இடம் பெற்றிருக்கும் பெண்ணின் குரல் உங்களுடையது தானா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ‘அது என்னுடைய குரல் இல்லை’ என்றார் சுவாதி.
அது என் குரல் இல்லை... - உடனே நீதிபதிகள், ‘உங்களிடம் நீதிமன்றம் உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது. ஆனால், திரும்ப திரும்ப பொய் சொல்கிறீர்கள்? இப்படி பொய் சொன்னால் குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பலாம்’ என்றனர். அதற்கு, ‘நான் எந்த அவமதிப்பும் செய்யவில்லை. பொய்யும் சொல்லவில்லை, எனக்கு தெரிந்ததை தான் சொல்கிறேன்’ என்றார் சுவாதி. ‘முதல் முறையாக காவல் நிலையம் சென்றபோது அங்கு சித்ரா, நடராஜன், கலைச்செல்வம் ஆகியோர் இருந்தார்களா? ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டு, அந்த எண் உங்களுடையது தானா?’ என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு சுவாதி, ‘காவல் நிலையத்தில் இருந்தவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. அந்த செல்போன் எண் என்னுடையது அல்ல. அந்த எண்ணை பயன்படுத்தியதாக எனக்கு நினைவு இல்லை’ என்றார்.
உண்மையை சொல்லுங்கள்... - யுவராஜ் யார் தெரியுமா? என நீதிபதிகள் கேட்டதற்கு, செய்திகளில் அவர் பெயர் வெளியானதால் தெரியும். மற்றபடி அவரை எனக்கு தெரியாது? என்றார்.
பின்னர் நீதிபதிகள், ‘திரும்ப திரும்ப பொய் சொல்கிறீர்கள். சாதி முக்கியம் இல்லை, சத்தியம்தான் முக்கியம். மதம் முக்கியம் இல்லை, சத்தியம், தர்மம், நியாயம் தான் முக்கியம். இவைகளுக்கு கட்டப்பட்டுதான் நடக்க வேண்டும். உங்களுக்கு நேரம் தருகிறோம். நன்றாக யோசித்து விட்டு வந்து உண்மையை சொல்லுங்கள்’ என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
விசாரணை ஒத்திவைப்பு... - அப்போது சுவாதிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக உயர் நீதிமன்ற கிளையிலுள்ள மருந்தகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றம் மீண்டும் கூடிய போது சுவாதி ஆஜரானார். அவரிடம், ‘சத்தியம் என்றைக்கு வேண்டுமானாலும் சுடும். விசாரணை நவ.30-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று சுவாதி நேரில் ஆஜராக வேண்டும். அன்றைக்காவது உண்மையை சொல்ல முயற்சியுங்கள். அன்றும் இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என உத்தரவிட்டனர்.
கண்ணீர் விட்ட சுவாதி... - உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சுவாதியை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் காலை 9.20 மணிக்கு உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவருடன் அவர் கணவரும் வந்திருந்தார். காலை 10.50 மணியளவில் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதிகளின் கேள்விக்கு மதியம் ஒரு மணி வரை சுவாதி பதிலளித்தார். திரும்ப திரும்ப பொய் சொல்வதாக நீதிபதிகள் கூறியதை கேட்டு, சுவாதி கண்ணீர் விட்டார். பின்னர் மயக்கமாகி மருந்தகம் அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றம் மீண்டும் கூடியபோது சுவாதி ஆஜராகவில்லை. அவர் மருந்தகத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். உணவு இடைவேளைக்கு பிறகு நீதிமன்றம் கூடிய போது சுவாதி ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT