Published : 25 Nov 2022 04:09 PM
Last Updated : 25 Nov 2022 04:09 PM
மதுரை: தமிழக சுற்றுலா இடங்களுக்கு அனைத்து வகை மாற்றத்திறனாளிகளும் எளிதாகச் செல்ல தனி வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்நத வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும், குறிப்பாக குற்றால அருவிகளுக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சுலபமாக செல்வதற்கு போதுமான வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், “தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையின் அழகை அருகே சென்று ரசிக்கவும், உணரவும் கடற்கரையில் நிரந்தர சாய்வு பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளிடம் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து சுற்றுலா இடங்களையும் மாற்றத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், "கேரளாவில் மாற்றுத்திறனாளிகள் சுற்றுலா இடங்களுக்கு சுலபமாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு நிபுணர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் கருத்துகள் கேட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்கு தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சுலபமாக சென்றடையும் வகையில் மாற்றுத்திறனாளிகள் கையாளும் வகையில் சுற்றுலா வழிகாட்டி புத்தகமும் வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT