Published : 25 Nov 2022 12:54 PM
Last Updated : 25 Nov 2022 12:54 PM
சென்னை: பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கோரியுள்ளது.
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில், இரண்டு திருமணங்கள் செய்து கொண்ட ஒரு நபரின் சொத்துகளின் பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு ஒன்று நடந்தது. சொத்துகளுக்கு அந்த நபரின் முதல் மனைவியின் வாரிசுதாரர்களும், இரண்டாவது மனைவியின் வாரிசுதாரர்களும் உரிமை கோரியிருந்தனர். அந்த வழக்கில் ஒருதரப்புக்கு சாதமான தீர்ப்பு வெளியான நிலையில். அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு தரப்பினர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணை மற்றும் தீர்ப்பு விவரங்களைப் படித்துப் பார்த்தார். அப்போது, குறுக்கு விசாரணையின் போது, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பியிருந்தார். நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்காக இந்த சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்காகவோ, அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவோ குறுக்கு விசாரணை இல்லை என தெரிவித்துள்ள நீதிபதி, தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT