Published : 25 Nov 2022 05:28 AM
Last Updated : 25 Nov 2022 05:28 AM
சென்னை: ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் கட்டணம் செலுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு, நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கே.மலர்விழி, அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எனவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு, நவ. 24 முதல் நவ.30-ம் தேதி வரை இறுதிநாள் உள்ள தாழ்வழுத்தப் பிரிவு மின் நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு நுகர்வோருக்கு நவ.28-ம் தேதி மின் கட்டணம்செலுத்துவதற்கான இறுதி நாள் என்றால், அவருக்கு நவ.30 வரை அவகாசம் வழங்க வேண்டும். அதேநேரம், ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும்.
இது தொடர்பான தகவல்களை, மின் கட்டண வசூல் மையங்கள் வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் வேண்டுகோள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆதாரை இணைக்காதவர்களின் மின்சார கட்டணத்தை பெற்றுக் கொள்ள முடியாது என பல இடங்களில் மறுக்கப்படுகிறது.
ஏற்கெனவே மின் கட்டண உயர்வால் பரிதவிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மின் கட்டணம் செலுத்த ஆதாரை இணைக்க வேண்டும் என்ற முடிவைத் திரும்பப் பெறவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கால அவகாசம் தேவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இதைச் செயல்படுத்துவதில் ஏராளமான பிரச்சினைகள் எழுந்துள்ளன.
எனவே, ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற தற்போதைய நிலையை ரத்து செய்து, ஆதாரை இணைக்காமல் பழையபடியே கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு 3 மாத கால அவகாசம் கொடுத்து, ஆதாரை இணைக்க எளிய வழிமுறைகளை மின்சார வாரியம் செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT