Published : 25 Nov 2022 06:37 AM
Last Updated : 25 Nov 2022 06:37 AM
சென்னை: திருவொற்றியூரில் ரூ.200 கோடிசெலவில் புதிதாக சூரை மீன்பிடிதுறைமுக கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ளமீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசை,பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றின் மூலம் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து வருகின்றனர். இவற்றை உள்ளூரில் விற்பனை செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
மீன்பிடி தொழிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் கடலுக்கு சென்று வருகின்றன. படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிலவிவரும் நெரிசலை குறைக்கும் வகையிலும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தவும் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, திருவொற்றியூர் பட்டினத்தார்கோயில் குப்பம் அருகே ரூ. 200 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இங்கு பெரிய மற்றும் சிறிய படகு தளம், வலை பின்னும் கூடம், சிறுமீன்கள் ஏலக்கூடம், ஆழ் கடல் மீன் ஏல விற்பனைக் கூடம் மற்றும் சுமார் 500 விசைப் படகுகள், 300 சிறிய வகை படகுகள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும், இந்த மீன்பிடி துறைமுகத்தில் அலுவலகம், தங்கும் விடுதி, உணவு விடுதி, மீன் விற்பனை கூடம், படகு பழுது பார்க்கும் தளம், மீன்கள் பதப்படுத்தும் கூடம் ஆகியவையும் கட்டப்படுகிறது. இத்துறை முகத்தின் கட்டுமான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 2023-ம் ஆண்டுமார்ச் மாதத்துக்குள் இத்துறைமுகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT