Published : 08 Dec 2016 01:06 PM
Last Updated : 08 Dec 2016 01:06 PM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆரம்பகால வெற்றிப் பயணத்தில் பாரதி பிறந்த மண் எட்டயபுரத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. 1981-ல் எட்டயபுரத்தில் நடந்த பாரதி நூற்றாண்டு விழா கூட்டத்தில் ஜெயலலிதாவை பேச வைத்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் இந்த முதல் மேடை பேச்சும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஜெயலலிதா மட்டுமல்ல, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எட்டயபுரத்து டன் நெருங்கிய தொடர்பு இருப்பதை இங்கு இருப்பவர்கள் பெருமையோடு நினைத்துப் பார்க்கின்றனர்.
இதுகுறித்து எட்டயபுரம் உமறு புலவர் சங்கத் தலைவர் மு.காஜா முகைதீன் கூறும்போது, ‘‘மகாகவி பாரதி, உமறு புலவர், முத்துஸ்வாமி தீட்சிதர், நாவலர் சோமசுந்தர பாரதி ஆகியோர் பிறந்து, மறைந்த புகழ்பெற்ற மண் எட்டயபுரம். அதுமட்டுமல்ல, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் இளமைக்கால அரசியல் ஆரம்ப வெற்றிப் படிக்கட்டாக எட்டயபுரம் மண் விளங்கியது என்பது ஆச்சரியமான விசயம்.
எம்.ஜி.ஆர். 10 வயது சிறுவனாக இருந்தபோது மதுரை பாய்ஸ் நாடகக் கம்பெனியில் பாலக நடிகராக இருந்தார். ஒருமுறை எட்டயபுரம் மன்னர் அவை யில் மதுரை பாய்ஸ் கம்பெனி நாடகம் நடந்தபோது அதில் நடித்த பாலக நடிகர் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பாராட்டிய மன்னர், அவருக்கு தங்க பொற்காசு பரிசாகக் கொடுத்துள்ளார். இதனை எம்.ஜி.ஆர். பின்னர் பேட்டிகள், நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுள்ளார். தான் நடிப்புலகில் வாங்கிய முதல் பரிசு என, எட்டயபுரத்தை மறக்காமல் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1980 வரை சினிமாவில் உச்சத்தில் இருந்தார். 1980-க்கு பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி இருந் தார். இந்த நேரத்தில் அவரை அரசிய லுக்கு கொண்டுவர நினைத்த எம்ஜிஆர், 1981-ல் எட்டயபுரத்தில் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் பேச வைத்தார்.
1981-ம் ஆண்டு டிசம்பர் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர், பஞ்சாப் முதல்வர் தர்பாரா சிங், தமிழக ஆளுநர் சாதிக் அலி மற்றும் முக்கிய தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டனர். இதில் 12-ம் தேதி மாலை ‘மகளிர் நோக்கில் பாரதி’ என்ற தலைப்பில் ஜெயலலிதா பேசினார். இதுவே ஜெயலலிவின் முதல் பொது மேடைப் பேச்சு எனலாம். இதற்குப் பிறகே கட்சியில் படிப்படியாக அவர் வளர்ந்து, தமிழக முதல்வர் பொறுப்பை எட்டிப் பிடித்தார்.
இதேபோல் தற்போது முதல்வ ராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல் வத்துக்கும் எட்டயபுரத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. பன்னீர்செல்வம் தனது மகளை எட்டயபுரத்தைச் சேர்ந்த காசி விஸ்வநாதபாண்டியன் என்பவ ருக்கு திருமணம் செய்து கொடுத்துள் ளார். இந்த திருமணத்தின்போது பன்னீர்செல்வம் பெரியகுளம் நகர்மன்ற தலைவராக இருந்தார்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT