Last Updated : 28 Dec, 2016 09:54 AM

 

Published : 28 Dec 2016 09:54 AM
Last Updated : 28 Dec 2016 09:54 AM

வருமான வரித்துறை மீது புகார் சொல்ல ராம மோகன ராவுக்கு தகுதியில்லை: மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கருத்து

‘‘தனது வீடு சோதனை யிடப்பட்டதில் வருமான வரித்துறை அத்துமீறியதாகச் சொல்ல ராம மோகன ராவுக்கு தகுதியில்லை’’ என்று மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும், அவரின் உறவினர் வீடுகளிலும் அண்மையில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரொக் கம், தங்கம், வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த ராம மோகன ராவ், சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “புரட்சித் தலைவி அம்மா என்னை நியமித்தார்’’ என்று தெரிவித்தார். தனது வீடு சோதனையிடப்பட்டதில் அத்துமீறி செயல்பட்டதாக வருமான வரித்துறை மீதும் குற்றம் சாட்டினார். அவரது பேட்டி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சட்ட நிபு ணர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கூறியதாவது:

ஒவ்வொரு பதவிக்கும் நேர்மை, பாரபட்சமின்மை உள்ளது. இவற்றைப் பின்பற்றுவதாக இருந்தால், ராமமோகன ராவ் பேட்டி அளித்திருக்கக்கூடாது. அவர் வீட்டில், அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது எதுவும் கிடைக்கவில்லை என்றால், தன்னைத் துன்புறுத்தியதாகவோ, அத்துமீறியதாகவோ பேசலாம். ஆனால், இந்த சோதனையில் அதிகளவு பணம் எடுத்த பிறகு பேசுவதற்கு அவருக்குத் தகுதி யில்லை.

சோதனை நடத்திய பிறகு வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவரைக் கைது செய்திருக்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் இதுவரை ஏன் கைது செய்யவில்லை? அவர் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்க சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை என்றார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கூறியதாவது:

ராம மோகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்தபோது தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஊழலுக்கான ஆவணத்தை தேடியபோது தமிழகத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தினார். இப்போது, “புரட்சித் தலைவி அம்மாவால் நியமிக்கப்பட்டவன்” என்று சொல்லி ஐ.ஏ.எஸ். அதி காரிகளுக்கும், அகில இந்திய ஆட்சிப் பணிக்கும் தீராத அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசின் கொள்கைகளை விளக்கவோ, சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்தோ பேட்டி அளிக்கலாம். அதைவிடுத்து தனிப்பட்ட முறை யிலோ, அரசுக்கு எதிராகவோ பேட்டி அளிக்கக்கூடாது என்று அகில இந்தியப் பணி நடத்தை விதிகளிலே கூறப்பட்டுள்ளது என்றார் தேவசகாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x