Published : 25 Nov 2022 12:03 AM
Last Updated : 25 Nov 2022 12:03 AM
சென்னை: அலைபேசியில் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் சூர்யா சிவாவை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்து அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் உரையாடினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
பாஜக தலைமை உத்தரவின்படி, திருப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் இன்று விசாரணைக்குழு முன் ஆஜாராகி விளக்கம் அளித்தனர். இதன்பின் கூட்டாக இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, "நாங்கள் இருவரும் பேசி முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. சுமுகமாக எங்களுக்குள் இருந்த பிரச்னைகளை பேசி முடித்துவிட்டோம். இதுவரை நாங்கள் அக்கா, தம்பியாக குடும்பமாக பழகி வந்தோம். இனியும் அதே நிலை தொடரும்" என்றனர்.
இருவரும் சுமுகமாக பேசி பிரச்சனைகளை முடித்துக்கொண்டதாக தெரிவித்தாலும், சூர்யா சிவாவை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்து அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், "பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இருவரும் சுமுகமாக சென்றுவிட்டோம் என்றாலும், அதை மாநில தலைவராக தான் ஏற்க மறுக்கிறேன். மாநில தலைவராக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது.
சூர்யா சிவா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். எனினும், கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர்மேல் தனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடிவரும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT