Published : 24 Nov 2022 08:11 PM
Last Updated : 24 Nov 2022 08:11 PM
மதுரை: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய இளம்பெண்ணை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ள உயர் நீதிமன்றம், அவரை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கலை சேர்ந்து வேறு சமூக பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 23.6.2015-ல் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.
வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை, குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை, பிரிவு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் மற்றொரு பிரிவிற்கு 5 ஆண்டு கடுங்காவல், சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கியது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்களுக்கு தண்டனை வழங்கக்கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் விசாரணையின் தொடக்கத்தில் சுவாதி (கோகுல்ராஜ் உடன் படித்தவர்) முக்கிய சாட்சியாக இருந்துள்ளார். அவர் நீதித்துறை நடுவரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164 பிரிவின் கீழ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் அவர் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியளிக்க அழைக்கப்படும் வரை இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்துள்ளது.
இதனால், நீதிமன்ற விசாரணையின் போது அவர் பிறழ்சாட்சியாக மாறியுள்ளார். முந்தைய வாக்குமூலத்தை மறுத்துள்ளார். விசாரணை நீதிமன்றம் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சுவாதியை பிறழ்சாட்சியாக அறிவித்து அவரது சாட்சியத்தை நிராகரித்துள்ளது. அவர் பிறழ்சாட்சியாக மாறியதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முயலவில்லை.
முக்கிய வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவது வழக்கமாகிவிட்டது. நட்சத்திர சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறும்போது நீதிமன்றங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்க கூடாது. இந்த வழக்கில் சுவாதியை மீண்டும் விசாரிக்க விரும்புகிறோம். இதனால் சுவாதியை விசாரணை அதிகாரி நாளை (25.11.2022) உயர் நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, அவருடன் போனில் பேசவோ கூடாது. அவர் எந்தவித பயமும் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜராகுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT