Published : 24 Nov 2022 08:53 PM
Last Updated : 24 Nov 2022 08:53 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவது என்னுடைய கடமை. மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, தணிக்கைத் துறை நடத்திய குழு விவாதத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதல்வர், பேரவைத் தலைவரிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.
இந்திய தணிக்கை நாளை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் குழு விவாதம் புதுச்சேரியில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து பேசுகையில், "மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும்போது சில மாற்றங்களை கொண்டுவந்து செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது மக்களுடைய நலனுக்காகவும் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் அந்த மாற்றம் இருக்கும். அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், குறையை எப்படி சரி செய்யலாம் என்று கோடிட்டு காட்ட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
விரைவாக செயல்பாடுகளுக்காக விதிகளை மீறி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். மக்களுடைய நலனுக்காக விதிகளை மாற்றி செய்யும்போது, அதனை தணிக்கை துறையினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். தலைமைச் செயலர், செயலர்களுக்கு இக்கூட்டத்தை முதலில் நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "மாநில அந்தஸ்து வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம். புதுச்சேரி வளர்ச்சிக்கு மாநில அந்தஸ்து மிக அவசியமான ஒன்று. எனவே, மாநில அந்தஸ்து வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவது என்னுடைய கடமை. மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
புறக்கணிப்பு என எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு: ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர் மற்றும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆகியோருக்கு புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியில் அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆண்டுதோறும் முறையாக செலவு கணக்கு தணிக்கை செய்வதில்லை. இதன் காரணமாக மக்கள் வரிப்பணம் வீணாகி வருகின்றது. அரசு நிதி வீணாகி வருவதை தடுக்கும் வகையிலும், நிதி செலவினத்தை செம்மைப்படுத்தும் வகையிலும் அரசு நிதியை பெற்று செலவு செய்யும் அமைப்புகளின் வரவு செலவு கணக்கைச் சரிபார்க்கும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் சார்பில் குழு விவாதம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுள்ளது.
ஒரு அரசு நிர்வாகம் செம்மையாக நடைபெறவேண்டும் என்றால் எதிர்க்கட்சியின் ஆலோசனை முக்கியம் தேவை. எதிர்க்கட்சி தலைவரை பங்கேற்கச் செய்து முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்துவதே ஜனநாயக மரபு. ஆனால் இதில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களை புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஜனநாயக விரோதம். எதிர்க்கட்சியினரை புறக்கணிப்பது அரசு துறைகள், நிறுவனங்களில் நடைபெறும் நிதி நிர்வாக சீர்கேட்டிற்கே வழிவகுக்கும். வழக்கம்போல் பிறரை குற்றம் சாட்டி தப்பித்துக் கொள்ளவே வழிவகுக்கும். " என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT