Published : 24 Nov 2022 06:26 PM
Last Updated : 24 Nov 2022 06:26 PM

ரூ.70 கோடி நிறுத்திவைப்பு: மழைநீர் தேக்கத்தால் ஒப்பந்ததாரர்களுக்கு ‘செக்’ வைக்கும் சென்னை மாநகராட்சி

கோப்புப் படம்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.70 கோடியை சென்னை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது.

சென்னையில் 2021-ம் ஆண்டில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம்போல் நீர் தேங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவற்றை தவிர்க்க, முன்னுரிமை அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கி.மீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும்,உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3,220 கோடியில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.1,714 கோடியில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதைத் தவிர, நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத் துறைகள் வாயிலாகவும், புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், 1,300 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வார ரூ.70 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்ததாரர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டது. இவர்கள் நீர்நிலைகள், வண்டல் வடிக்கட்டி தொட்டிகள், கால்வாய்களில் ஆகிவற்றில் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக சமீபத்தில் பெய்த கனமழையால், பிரதான சாலைகளில் நீர் தேங்கவில்லை. அதேநேரம், உட்புற சாலைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் காணப்பட்டது. இந்நிலையில், தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களுக்கான தொகையை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் பெரும்பாலான இடங்களில் அதிக கனமழை பெய்த ஓரிரு மணி நேரத்திற்குள் நீர் வடிந்து விடுகிறது. சில தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேக்கம் உள்ளது. மழைநீர் தேக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தீர்வு ஏற்படுத்தி, மீண்டும் நீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வண்டல் வடிகட்டி தொட்டிகள், நீர்நிலைகள் என டிசம்பர் மாத இறுதி வரை தூர்வார, ஒப்பந்தாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தொடர் மழைக்குப் பின், குறிப்பிட்ட காலம் இடைவெளி கிடைக்கும்போது, அடுத்த மழையை சமாளிக்கும் வகையில், தூர்வாரும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக, ஒப்பந்ததாரர்களுக்கான ரூ.70 கோடி ரூபாயை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது. முறையாக தூர்வாரமல், மழைநீர் தேக்கத்திற்கு காரணமாக ஒப்பந்தாரர் இருப்பின் அவருக்கான தொகை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x