Last Updated : 24 Nov, 2022 06:59 PM

2  

Published : 24 Nov 2022 06:59 PM
Last Updated : 24 Nov 2022 06:59 PM

எதிர்கால சந்ததியினருக்காக தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

திருச்சி மலைக்கோட்டை

மதுரை: எதிர்கால சந்ததியினருக்காக தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை பொதுநலச் சங்கச் செயலாளர் ஆர்.சவுந்தராஜன் தாக்கல் செய்த மனு: திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பல்லவர் குகைக் கோயில் உள்ளது. இந்த குகைக் கோயிலை ஒட்டி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டிடத்தால் குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, குகைக் கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ‘பல்லவர் குகை கோயில் அருகே உள்ள இடம் ரோசன் என்பவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குடோன் கட்டியுள்ளார். அதனால் குகைக் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டு, அதில் 3-ம் நபர்கள் கட்டிடங்களை கட்டியுள்ளனர். இந்த கட்டிடங்களின் வாடகை கோயிலுக்காக செலவிடப்படுகிறது. இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ''வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் நாட்டின் கலாச்சாரம், கலை, பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பல்லவர் குகைக் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுமா, இல்லையா என்பது தொடர்பாக மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர், திருச்சி மண்டல மத்திய தொல்லியல் அதிகாரி ஆகியோர் 4 வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆய்வில் கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியவந்தால் அதை சட்டப்படி அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x