Published : 24 Nov 2022 05:34 PM
Last Updated : 24 Nov 2022 05:34 PM
சென்னை: சென்னை மாநகராட்சியில் இருந்து 6 மாதத்திற்கு முன்பு பணியிட மாறுதலில் சென்ற அதிகாரியை, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் என்று குறிப்பிட்டு தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். இதற்காக அமைக்கப்படும் குழுவில் தொழிலாளர் நலத் துறை, அரசு மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரநிதிகள் இடம்பெறுவார்கள். இதன்படி, தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்க குழு அமைத்து கடந்த அக்டோபர் 28-ம் தேதி தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசின் சார்பில் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர், ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர், நகராட்சி நிர்வாகத் துறை துணை இயக்குனர், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்தக் குழுவில், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் என்ற பிரிவில் 6 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக இருந்த மணீஷ் கடந்த ஜூன் மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றாக சங்கர் லால் குமாவத் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் என்று குறிப்பிட்டு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT