Published : 24 Nov 2022 04:13 PM
Last Updated : 24 Nov 2022 04:13 PM
சென்னை: தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெறுவது தொடர்பாக அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கான பயிற்சி முகாமை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சென்னையில் இன்று (நவ.24) தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தியாளர்களிடம் பொருள்கள் பெற்று அதற்கு தரம் அளித்து, பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக மங்களம், மருதம், அர்த்தணாரீஸ்வரர் போன்ற பெயர்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான பொருள்களை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான பெயரிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தரமான பொருள்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியமான பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 14,60,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்படாமல் உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்கப்படாத குடும்ப அட்டைதாரர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கூட்டுறவுத் துறையில் ஆண்டு மலர் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மலர்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் சிறப்புகள், புரதான விஷயங்கள் போன்றவற்றை கண்டறிந்து சிறப்பு சாதனை மலர் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT