Published : 24 Nov 2022 07:46 AM
Last Updated : 24 Nov 2022 07:46 AM

மாணவர்களிடம் வங்கித் துறை திறன்களை வளர்க்க உள்தணிக்கையாளர் அமைப்புடன் உயர் திறன் மேம்பாட்டு மையம் ஒப்பந்தம்

இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் மாநாட்டை தமிழக நிதித் துறை செயலர் என்.முருகானந்தம் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவர்களிடம் வங்கி, நிதி நிர்வாகம் சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்துடன் இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் சென்னை பிரிவு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. படம்: பு.க.பிரவீன்

சென்னை: கல்லூரி முடிக்கும் மாணவர்களிடம் வங்கி மற்றும் நிதித் துறைக்கு தேவையான திறன்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் - இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பு (ஐஐஏ)இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னையில் நேற்று இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக நிதித் துறைசெயலர் என்.முருகானந்தம்தொடங்கி வைத்தார். இதில், தணிக்கை துறை, தொழில் துறைசார்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தணிக்கை துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்துஉரையாடினர்.

மாநாட்டை தொடங்கி வைத்து என்.முருகானந்தம் பேசும்போது, “தணிக்கை துறை மிகப் பெரும் மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. முன்பு, நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்ப்பதற்கு தணிக்கையாளர்கள் தேவைப்பட்டனர். ஆனால், இப்போது நிறுவனத்தை பாதுகாப்பாக முன்னகர்த்திச் செல்வதற்கு தணிக்கையாளர்கள் தேவைப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தணிக்கை துறையும் விரிவடைந்து வருகிறது. நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை மாணவர்களிடம் வளர்த்தெடுப்பது தமிழக அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது” என்றார்.

ஐஐஏ சென்னை பிரிவின் தலைவர் ரவி வீரராகவன் பேசும்போது, “வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தமிழக இளைஞர்களை அதிகஎண்ணிக்கையில் பணியில் அமர்த்த உள்ளன. இந்தச் சூழலில், இந்நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்துடன் இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பும் இணைந்துள்ளது. இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தின் வங்கி, நிதி சேவைப் பிரிவின் இயக்குநர் சாய் சுமந்த் கூறும்போது, “வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு துறையில் 10,000 தமிழக இளைஞர்களை பணிக்கு எடுக்க முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிவழங்கும் முயற்சியில் இறங்கிஉள்ளோம். ஐஐஏ உடனான இந்த ஒப்பந்தம் அத்தகைய முயற்சிகளில் ஒன்று” என்றார். வங்கி, நிதி சேவை, காப்பீடு துறைகளில் 10,000 இளைஞர்களை பணிக்கு எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x