Published : 24 Nov 2022 06:24 AM
Last Updated : 24 Nov 2022 06:24 AM
நிலக்கோட்டை: நிலக்கோட்டை, வத்தலகுண்டு மற்றும் திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நிலக்கோட்டை, வத்தலகுண்டு பகுதிகளில் மல்லிகை அதிகம் சாகுபடியாகிறது.
திண்டுக்கல், நிலக்கோட்டையில் பூ மார்க்கெட் இயங்கிவருகிறது. சுற்றுவட்டார விவசாயிகள்பூக்களை பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டுவந்து விற்பனைசெய்கின்றனர். இங்கிருந்து பிறமாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன.
புரட்டாசி மாதம் பூக்களின் விலை வெகுவாக உயரவில்லை என்றாலும், கார்த்திகையில் ஐயப்ப சீசன் தொடங்கிய பிறகு பூக்களின் விலை சிறிது உயர்ந்துள்ளது.
மல்லிகை விளைச்சலுக்கு அளவான தண்ணீர், வெயில் காலம் தான் ஏற்ற பருவம். மழை, பனிக் காலங்களில் மல்லிகை விளைச்சல் போதுமானதாக இருக்காது. மேலும் பறிப்பதற்கு முன்பு செடியிலேயே சேதமடைந்து விடுவதால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
கடந்த மாதம் மழையால் பாதிக்கப்பட்ட மல்லிகைச் செடிகள் தற்போது பனிப்பொழிவால் மொட்டாக இருக்கும்போதே பூக்கள் கருகிவருகின்றன. இதனால் குறைந்த அளவு மல்லிகையே சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில், கடந்த வாரம் கிலோ மல்லிகைப்பூ ரூ.1,000-க்கு விற்ற நிலையில், தற்போது கிலோ ரூ.2,300-க்கு விற்பனை ஆகிறது.
இதுகுறித்து நிலக்கோட்டை விவசாயி சரவணன் கூறும்போது, “ஆண்டுதோறும் மழை, பனிக் காலத்தில் மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்து விடும். விளையும் சொற்ப பூக்களும் அதிக மழை பெய்தால் செடியிலேயே அழுகிவிடும். மேலும் பனிக்காலத்தில் கருகல் நோய், செவட்டை நோய் தாக்குதலால் அரும்பிலேயே உதிர்ந்து விடும். இதனால் அதிக அளவு பூக்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியவில்லை” என்றார்.
இதுதொடர்பாக பூ வியாபாரிகள் கூறும்போது, “சிலர் பசுமைக் குடில் அமைத்து எந்த சீதோஷ்ண நிலையையும் தாங்கும் விதமாக மல்லிகைச் செடிகளை வளர்க்கின்றனர். அவர்களிடம் இருந்து வழக்கம் போல பூக்கள் சந்தைக்கு வந்து விடுகின்றன. ஆனால், வழக்கம்போல சாகுபடி செய்பவர்களுக்கு பனிக்காலம் சவாலாக உள்ளது. ஜனவரி முதல் வாரம் வரை இதே நிலை நீடிக்கும் என்பதால், மல்லிகை வரத்து மேலும் குறைந்து கிலோ ரூ. 3,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT