Last Updated : 15 Dec, 2016 08:37 AM

 

Published : 15 Dec 2016 08:37 AM
Last Updated : 15 Dec 2016 08:37 AM

புயலால் உருக்குலைந்த மயானங்களுக்குள் உடல்களை தோளில் தூக்கி சென்று அடக்கம் செய்த மக்கள்

‘வார்தா’ புயலால் மரங்கள் அடியோடு சாய்ந்ததால் சென்னை யில் மயானங்கள் உருக்குலைந்தன. உயிரிழந்தவர்களின் உடல்களை மயானங்களுக்குள் தோளில் தூக்கிச் சென்று பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட மயானங்கள் உள்ளன. இதில், நவீன எரிவாயு மற்றும் மின்மயானங்களும் அடக்கம். புயல் காரணமாக மரங்கள் விழுந்ததால் பெரும்பாலான மயானங்கள் சேதமடைந்தன. அதனால் உடல்களை அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புயலடித்த நாளில் பல மயானங்களில் உடல்களை தோளில் தூக்கிச்சென்று மக்கள் அடக்கம் செய்துள்ளனர்.

சென்னை டாக்டர் பெசன்ட் சாலை, சிவராஜபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார். புயல்,மழை காரணமாக அவரது உடலை கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து ஆனந்த்ராஜின் உறவினர் பிரித்விராஜ் கூறும்போது, “கிருஷ்ணாம்பேட்டை மயானத்தின் நுழைவுவாயில் முன்பும், உள்ளேயும் மரங்கள் விழுந்ததால் மயானத்துக்குள் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால், ஆனந்தராஜின் உடலை தோளில் தூக்கிச் சென்றோம். எங்கள் வழக்கப்படி உடலை அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், அன்றைய தினம் வீசிய புயல், மழையால் உடலை அடக்கம் செய்வது கடினம் என்றும் மறுநாள் (13-ம் தேதி) கொண்டு வருமாறும் அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், செவ்வாய்க்கிழமை நாங்கள் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்பதால் வேறு வழியில்லாமல் புயல், மழைக்கிடையே மிகுந்த வேதனையோடு அன்றைய தினமே உடலை தகனம் செய்தோம்” என்றார்.

கிருஷ்ணாம்பேட்டை மயானத் தின் பொறுப்பாளர் இஸ்மாயில் கூறும்போது, “கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் மற்ற மயானங்களில் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் தவித்தபோதுகூட எங்கள் மயானத்தில் உடல்களை நல்ல முறையில் தகனம் செய்தோம். ஆனால், இந்த புயலால் கிருஷ்ணாம்பேட்டை மயானம் மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளது. மரங்கள் விழுந்ததால், சுற்றுச்சுவர் இடிந்துவிட்டது. மின்விளக்குகளும் பாதிக்கப்பட்டதால் இரவில் உடல்களை அடக்கம் செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

மயிலாப்பூர் மின் மயான பொறுப்பாளர் எம்.வி.வேலு கூறும் போது, “புயலால் மயானத்தில் இருந்த பெரும்பாலான மரங்கள் சாய்ந்துவிட்டன. அதனால் உடல் களை புதைக்க இடம் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாய்ந்த மரங்களை முழுமையாக வெட்டி அகற்றினால் மட்டுமே உடல்களை புதைக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, மயானங்களை சீர்செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உதவ வேண்டும்” என்றார்.

திருப்பி அனுப்பப்பட்ட உடல்கள்

கடந்த 3 நாட்களாக மின் விநியோகம் முழுமையாக சீராகாததால் சென்னையில் உள்ள மின் மயானங்களில் உடல்களை தகனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து கண்ணம்மாபேட்டை மின் மயான ஊழியர் ஒருவர் கூறும்போது, “புயல் வீசிய நாளன்று மின்சாரம் இல்லாததால் இங்கு வந்த உடல்களை அருகில் உள்ள சைதாப்பேட்டை மயானத்துக்கு அனுப்பிவிட்டோம். மேலும், அண்மையில்தான் கண்ணம்மாபேட்டை மின்மயானம் ரூ.55 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு பூங்கா போல காட்சியளித்தது. மயானத்துக்கு வரும் மக்களும் பராமரிப்பு குறித்து பாராட்டிச் சென்றனர். புயலால் பெரும்பாலான மரங்கள் விழுந்துவிட்டதால், ஓய்வறை, சமாதிகள் சேதமடைந்துள்ளன. மயானத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஆகும்” என்றார்.

இதேபோல, அரும்பாக்கம் மின்மயானத்தில் மின்விநியோகம் சீராகாததால், நேற்று முன்தினம் அங்கு தகனம் செய்ய வந்த உடல் களை ஊழியர்கள் கோயம்பேடு மயானத்துக்கு அனுப்பிவிட்டனர். எனவே, மயானங்களை சீர்செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x