Published : 23 Nov 2022 06:50 PM
Last Updated : 23 Nov 2022 06:50 PM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் 2016-17-ம் ஆண்டிற்குப் பின் மேம்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள சாலைகள் மேம்படுத்த தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு 4,600 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
மேலும், சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக்குழு மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து ரூ.7,338 கோடி மதிப்பில் 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இதன்படி, வரும் 4 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி வழங்கி, இதர திட்டநிதிகளை ஒருங்கிணைத்து, மொத்தம் ரூ.9,588 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 20,990 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
இதில், முதற்கட்டமாக வரும் 2023-ம் ஆண்டில் மொத்தம் ரூ.5,140 கோடி மதிப்பீட்டில் 12,061 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளது. சென்னை மாநகராட்சியில் 1,680 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1,171 கோடி மதிப்பீட்டிலும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 7,116 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ. 2,535 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சிகளில் 3,265 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1,434 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படவுள்ளது.
இந்தச் சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (TUFIDCO) நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தரமான சாலைகள் அமைக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்நிறுவனத்தால் இறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT