Published : 23 Nov 2022 04:16 PM
Last Updated : 23 Nov 2022 04:16 PM
சென்னை: "மத்தியில் பிரதமர் வேட்பாளரை சொல்ல வேண்டும் என்பதற்கான கூட்டணியில் அமமுகவும் இடம்பெறும். நிச்சயம் நல்ல கூட்டணி அமையும். வலுவான கூட்டணியாக அமையும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், அதிமுக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் அதிமுக இன்று சின்னம் இல்லாமல், கட்சி இல்லாமல், நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. எனவே, அந்தக் கட்சியைப் பற்றி பேசுவது தேவையற்றது என்று நினைக்கிறேன்.தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பேசிக் கொள்ளலாம்.
பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்துள்ள நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கின் நிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை" என்றார்.
அப்போது அவரிடம் மக்களவைத் தேர்தலில் அமமுக யாரும் கூட்டணி அமைக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பொறுத்திருந்து பாருங்கள், 2023-ல் கூட்டணிகள் எல்லாம் உருவாகும்" என்றார். பாஜகவுடன் கூட்டணி வருமா என்ற கேள்விக்கு, "மத்தியில் பிரதமர் வேட்பாளரை சொல்ல வேண்டும் என்பதற்கான கூட்டணியில் அமமுகவும் இடம்பெறும். நிச்சயம் நல்ல கூட்டணி அமையும். வலுவான கூட்டணியாக அமையும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது குடும்பத்துடன் மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT