Published : 23 Nov 2022 01:08 PM
Last Updated : 23 Nov 2022 01:08 PM
சென்னை: தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2017ம் ஆண்டு எதிர் கட்சி தலைவராக இருக்கும் போது, மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இது தொடர்பான அறிக்கையில்," முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அத்துமீறிய தலையீடுகளால் காவல்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே, காவல்துறை நிர்வாகத்தின் சீரழிவைத் தடுத்து நிறுத்த, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-ன் கீழ் அமைக்கப்படவேண்டிய, ‘மாநில பாதுகாப்பு ஆணையம்' (State Security Commission) இப்போது மிகவும் அவசியமாகிறது. காவல்துறையினர் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான கொள்கை வழிகாட்டுதல், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயல்பாடுகளை எல்லாம் காவல்துறைக்கு வகுத்துக் கொடுத்தல், பொறுப்புணர்வுடன் காவல்துறை செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு இந்த மாநில பாதுகாப்பு ஆணையத்தின் பணி மிக முக்கியமாக தேவைப்படுகிறது." என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர்(உள்துறை ) பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:
மாநில பாதுகாப்பு ஆணையம்: தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆண்டுக்கு ஒரு முறை கூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கீழ் நிபுணர் குழுவும் அமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு காவல் துறை பணியமைப்பு வாரியம்: மாநில அளவிலான பணியமைப்பு குழுவில் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை ஆகிய 3 பிரிவுகளின் கூடுதல் டிஜிபிக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மண்டல அளவிலான குழுவிற்கு ஐஜி தலைவராக செயல்படுவார். மேலும், ஆயதப் படை மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளுக்கு என்று தனியாக பணியமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சரகம் வாரியாகவும், மாவட்டம் வாரியாகவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகர் காவல் துறையில் பெருநகர் குழு, மண்டல அளவிலான குழுக்கள், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிலையில் உள்ள காவல் துறையினரின் பதவி உயர்வு மற்றும் பணி இட மாற்றம் தொடர்பாக இந்த குழு முடிவுகளை எடுக்கும்.
சிபிசிஐடியில் புகார் பிரிவு: தமிழ்நாடு காவல் துறையின் கீழ் சிபிசிஐடியில் புகார் புரிவு அமைக்கப்படும் என்று இந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது. இதில் ஓய்வு பெற்ற பணியாளர்களை பணிமர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment