Published : 23 Nov 2022 07:13 AM
Last Updated : 23 Nov 2022 07:13 AM

அவ்வை நடராசன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி; காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னையில் காலமான தமிழறிஞர் அவ்வை நடராசனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னை: மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். காவல்துறை மரியாதையுடன் உடல் மயிலாப்பூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான அவ்வை நடராசன்(87), வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும், அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து முதல்வரின் உத்தரவுப்படி, காவல்துறை மரியாதையுடன் அவ்வை நடராசனின் உடல் நேற்று மாலை 5 மணியளவில் மயிலாப்பூர், கைலாசபுரம் மயானத்தில் திருக்குறள் உள்ளிட்ட தமிழ்ப் புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவ்வை நடராசன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழ் அறிஞரும், கல்வியாளரும், பத்ம விருது பெற்றவருமான அவ்வை நடராசனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமலேயே அரசுச் செயலாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் அவ்வை நடராசன். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக ஆட்சித் துறையில் தமிழ்ச் சொல்லாடல்களை பெருமளவில் வளர்த்த பெருமை அவ்வை நடராசனுக்கு உண்டு.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், சு.திருநாவுக்கரசர் எம்.பி. விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.கே.சசிகலா, முன்னாள் எம்எல்ஏ எம்ஜிகே நிஜாமுதீன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x