Published : 23 Nov 2022 06:51 AM
Last Updated : 23 Nov 2022 06:51 AM
சென்னை: சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் உலக நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிஏஜி, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து, ‘உலக நினைவு தினம் 2022’ அனுசரிக்கப்பட்டது.
பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டுபேசுகையில், ‘சாலை பாதுகாப்பைமேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் ஒருங்கிணைந்து போக்குவரத்து, சாலை விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் விபத்து தடுக்கப்படுவதோடு, விலை மதிப்பற்ற உயிர் இழப்புகளையும் குறைக்கலாம்’ என்றார்.
முன்னதாக மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விநாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில், சென்னையைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவருடன் அமர்ந்து பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம், வேக வரம்புக்குள் வாகனம் ஓட்டுதல், மது அருந்தி விட்டு வாகனம்ஓட்டக்கூடாது உள்பட சாலைபாதுகாப்பு குறித்து அனிமேஷன்வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர், போக்குவரத்துத் துறை, கூடுதல் ஆணையர் எம்.மணகுமார், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT