Published : 22 Nov 2022 06:30 PM
Last Updated : 22 Nov 2022 06:30 PM
புதுடெல்லி: மேகதாது அணை திட்டத்தைக் கொண்டு வரும் கர்நாடகத்தின் முயற்சி என்பது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறுவதாகும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம் முறையிடப்பட்டது. இதற்கு ஆணையமும் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இவை உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூறி தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு விளக்க மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது.
அதில், "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த விவகாரத்தில் ஆலோசனை செய்ய முடியாது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது உச்ச நீதிமன்றம் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் வழங்கிய இறுதித் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது தானே தவிர புதிய திட்டங்களுக்கான அனுமதி உள்ளிட்டவற்றை பரிசோதிப்பது கிடையாது.
அதேபோல, மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடகத்தின் முயற்சி என்பது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறுவதாகும். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கர்நாடகா அரசு உரிய அனுமதி இல்லாமல் செயல்படுத்தி வரும் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது.
மேகதாது அணை விவகாரத்தில் ஆலோசனை நடத்துவதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் சட்ட அறிவுரை வழங்கியதாக ஆணையம் தெரிவிப்பதை ஏற்க முடியாது. காவிரியில் கட்டுப்படுத்தப்படாத உபரி நீரை தடுக்கவோ, மடை மாற்றம் செய்யவோ கர்நாடகத்துக்கு அதிகாரம் கிடையாது. அந்த உபரி நீரை தேக்குவதற்காகவே 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்ட முற்சி எடுப்பது காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கு எதிரானது.
கபினி நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள கபினி துணைப் படுகையின் கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்து, கிருஷ்ண ராஜ சாகரின் கீழுள்ள காவிரி ஆற்றின் பிரதான ஓடையின் நீர்ப்பிடிப்பு, சிம்ஷா, அர்காவதி மற்றும் சுவேர்ணவதி துணைப் படுக்கைகள் மற்றும் பல்வேறு சிறிய நீரோடைகள் வழியான நீர் வரத்து, கபினி நீர்த்தேக்கங்களிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட நீர் வரத்து; கிருஷ்ண ராஜ சாகர நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர் வரத்து ஆகிய மூன்றும் தமிழக நீர் வரத்துக்கு முக்கியக் காரணம். ஆனால், 67.17 டிஎம்சி கொள்ளவு கட்டுப்படுத்தப்பட்டால் இந்த நீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்படும்.
கபினி மற்றும் கிருஷ்ணா ராஜா சாகர் கீழ்ப் பகுதிகளில் இருந்து வரும் கட்டுப்பாடற்ற நீர் வரத்தையும் கர்நாடக அரசு தடுக்க முயல்கிறது. மேலும் கர்நாடகா- தமிழ்நாடு எல்லை பகுதியில் உள்ள காவிரியின் இடைப்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் உபரி நீரை தடுப்பது என்பது தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரை தடை செய்வதாகும். எனவே இதை எந்த காரணத்துக்காகவும் ஏற்க முடியாது" என விளக்க மனுவில் தெரிவித்துள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆணைய கூட்டத்தில் விவாதிக்க மட்டோம் என உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்து விட்டு, தற்போது அந்த உறுதிமொழியை மீறி மேகதாது விவகாரத்தை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க அதனை கருப்பொருளாக சேர்த்துள்ளது” என்று தமிழக அரசு விளக்க மனுவில் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், மேகதாது தொடர்பாக காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதம் செய்யக் கூடாது. கருப்பெருளாக சேர்க்கவும் கூடாது என அறிவுறுத்துமாறு உச்ச நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி தமிழக அரசு சார்பில் மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டதையும் தமிழக அரசு தனது விளக்க மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment