Published : 22 Nov 2022 02:43 PM
Last Updated : 22 Nov 2022 02:43 PM

திருவண்ணாமலை | நவ.24-ல் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்: டிச.6-ல் மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்: படம் - இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை மறுநாள் (24-ம் தேதி) மாலை தொடங்குகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெறும். இவ்விழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை மறுநாள் (24-ம் தேதி) மாலை தொடங்க உள்ளன. காமதேனு வாகனத்தில் எழுந்தருளும் துர்க்கை அம்மனின் வீதியுலா நடைபெற உள்ளது. பின்னர் 25ம் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன், 26-ம் தேதி வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் ஆகியோரது உற்சவம் நடைபெற இருக்கிறது.

இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் வரும் 27-ம் தேதி காலை சதுர்த்தி திதி, பூராடம் நட்சத்திரம், விருச்சிக லக்கினம் மற்றும் சித்தயோகம் கூடிய சுப தினத்தில் காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளன. அதன் பிறகு, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது. காலை மற்றும் இரவு உற்சவம் நடைபெற உள்ளன.

27ம் தேதி காலையில் வெள்ளி விமானங்களிலும் மற்றும் அன்றிரவு மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனத்தில் பஞ்சமூர்த்திகள், 28-ம் தேதி காலை விநாயகர், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர், அன்றிரவு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள், 29ம் தேதி காலை பூத வாகனத்தில் சந்திரசேகரர், அன்றிரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்னவாகனத்தில் பஞ்சமூர்த்திகள், 30ம் தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரர், வெள்ளி கற்பகவிருக்ஷம், அன்றிரவு வெள்ளி காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள், டிசம்பர் 1ம் தேதி காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர், அன்றிரவு வெள்ளி மூஷீகம், வெள்ளி மயில், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா நடைபெறும்.

டிசம்பர் 2-ம் தேதி காலை மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர், 63 நாயன்மார்களின் உற்சவமும், அன்றிரவு பஞ்சமூரத்திகளின் வெள்ளி தேரோட்டமும் நடைபெற உள்ளன.

டிசம்பர் 3-ல் மகா தேரோட்டம்: மகா தேரோட்டம் டிசம்பர் 3ம் தேதி காலை நடைபெற உள்ளது. பஞ்சமூர்த்திகள் என்றழைக்கப்படும் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனித் திருத்தேர்களில் மாட வீதியில் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர். ஒவ்வொரு திருத்தேரும் நிலைக்கு வந்த பிறகு, அடுத்த திருத்தேரின் புறப்பாடு இருக்கும்.

காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் இரவு வரை நீடிக்கும். ஓரே நாளில் 5 திருத்தேர்களின் பவனி வருவது என்பது கூடுதல் சிறப்பை பெற்றதாகும். டிசம்பர் 4-ம் தேதி காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகரர், அன்று மாலை 4 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூரத்திகளும், டிசம்பர் 5ம் தேதி காலை புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரர், அன்றிரவு கைலாச மற்றும் காமதேனு வாகனத்தில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலா நடைபெற உள்ளது.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருதல்: இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகைத் தீபத் திருவிழா டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றி வைக்க உள்ளனர். பின்னர் பிரம்மதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும். மாலை 5.50 மணியளவில், தங்க கொடி மரம் முன்பு, ஆண் பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்க உள்ளார்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்நிகழ்வு நடைபெறும். இதையடுத்து, மலையே மகேசன் என போற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் பருவத ராஜகுல வம்சத்தினர் 5 அடி உயரம் உள்ள கொப்பரையில் மகா தீபத்தை ஏற்றி வைக்க உள்ளனர். ஜோதி வடிவாய், மலை உச்சியில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பதால், கோயில் நடை அடைக்கப்படும். 11 நாட்களுக்கு மகா தீபத்தை தரிசிக்கலாம்.

டிசம்பர் 8-ல் சுவாமி கிரிவலம்: மகா தீபத்தை தொடர்ந்து ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. 7ம் தேதி இரவு சந்திரசேகரர், 8ம் தேதி இரவு பராசக்தி அம்மன், 9ம் தேதி முருகர் தெப்பல் உற்சவம் நடைபெறும். பின்னர், 17வது நாளான டிசம்பர் 10ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகைத் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக, உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் டிசம்பர் 8ம் தேதி கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும், பாதுகாப்புப் பணிகளை காவல்துறையும் செய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x