Published : 22 Nov 2022 02:11 PM
Last Updated : 22 Nov 2022 02:11 PM

டிபிஐ வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை; தமிழக அரசு கைவிட வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி | கோப்புப் படம்.

சென்னை: பள்ளி கல்வி துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைப்பதை திமுக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கும் சாலையில், டிபிஐ வளாகத்தில் முன்னாள் கல்வி அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான அன்பழகனுக்கு சிலை நிறுவும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

''2013 உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் பொது இடங்களில் எந்த சிலை நிறுவவும் தமிழகம் அனுமதியளிக்கவில்லை'' என்று கடந்த 23.1.2022 என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றில் தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக அரசின் சார்பில் வாக்குமூலத்தை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாலைகளிலோ, நடைபாதைகளிலோ, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பொது இடங்களிலோ இனி சிலைகள் வைப்பதற்கு மாநிலங்கள் அனுமதியளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஜனவரி 18, 2013 அன்று அளித்த தீர்ப்பின்படி, அரசு அலுவலகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள இடங்கள் என்பதை உணர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கல்வித்துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் சிலையை நிறுவும் முயற்சியினை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மேலும் அக்டோபர் 7,2021 அன்று சென்னை உயர் நீதிமன்றதின் நீதியரசர் எம்.சுப்பிரமணியன் வழங்கிய தீர்ப்பில், பொது இடங்கள், சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் இனி சிலைகள் அமைக்க அனுமதியளிக்கக்கூடாது என்று உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டதை அரசு மறந்துவிடக்கூடாது. இனி அரசு அலவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் சிலைகள் வைப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். மேலும், அதே தீர்ப்பில், பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு தலைவர்களின் பூங்கா ஒன்றை உருவாக்கி அங்கே தலைவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்ற உத்தரவையும் செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x