Published : 30 Dec 2016 10:09 AM
Last Updated : 30 Dec 2016 10:09 AM

நெடுஞ்சாலை சந்திப்புகளில் நடக்கும் 50% சாலை விபத்துகளை குறைப்பது எப்படி?- ஐஐடி பேராசிரியர் விளக்கம்

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலை களில் முக்கிய சந்திப்புகளில் நடக்கும் 50 சதவீத விபத்துகளை குறைப்பது எப்படி என்பது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு மேற்கொண்டு விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. சாலை விபத்துகளால் உயிர் இழப்போரின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் சுமார் 15,500 பேர் பலியாகின்றனர். நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து மத்திய அரசு மேற் கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, போக்குவரத்து துறையை சார்ந்துள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

அதிக சாலை விபத்துகள் நடக்கும் நெடுஞ்சாலைகளில் மேற் கொள்ள வேண்டிய புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பணிகள் குறித்து சென்னை ஐஐடியில் உள்ள போக்குவரத்து பொறியியல் துறை சார்பில் பல்வேறு கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் கீதகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நெடுஞ் சாலைகளில் இருக்கும் முக்கிய சாலை சந்திப்புகளில்தான் நடக் கின்றன. எனவே, சந்திப்புகளில் சாலை போக்குவரத்து முறைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அங்குள்ள சர்வீஸ் சாலைகளில் இருந்து நெடுஞ்சாலையை நோக்கி வரும் வாகனங்கள் நெடுஞ்சாலை களில் பாதுகாப்பாக வந்து செல்ல பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் சுமார் 50 மீட்டர் முதல் 80 மீட்டர் தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்க வேண்டும். அப்போது, சர்வீஸ் சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கவனமாக வர முடியும்.

இதுவே, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களாக இருந்தால், அங்கு தேவையான அளவுக்கு மேம்பாலங்கள் கட்ட லாம். நெடுஞ்சாலைகளிலும் முக் கிய சந்திப்புகளிலும் சிக்னல்கள் அமைக்க வேண்டும். நெடுஞ்சாலை களை இணைக்கும் மாவட்ட, நகர சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

அதிவேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டுபிடித்து, அபராதம் விதிக்க நெடுஞ் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

ஓட்டுநர்களின் கவனத்தை திசை திருப்பும் தேவையற்ற பலகைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க இது போன்ற பல்வேறு முக்கிய பரிந் துரைகளைத் தமிழக அரசு மற்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறையிடமும் வலியுறுத்த உள் ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x