Published : 22 Nov 2022 07:39 AM
Last Updated : 22 Nov 2022 07:39 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியவரிடம் திமுக கவுன்சிலரின் கணவர் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெப்பக்குளம் பகலவன் பூக்கார தெருவில் வசிக்கும் ஒரு வயதான தம்பதி, பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி உள்ளனர். கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புப் பெறுவதற்கான பணியை மேற்கொண்டனர். இவர்களிடம் மதுரை மாநகராட்சி 42-வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகம் வீட்டுக்கு வந்து பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதை அந்த தம்பதி புதுச்சேரியில் உள்ள தனது மகன் மணிகண்டனிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து மணிகண்டன், திமுக கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகத்திடம் மொபைல் போனில் பேசினார். அப்போது மணிகண்டனை கார்மேகம் மிரட்டியதாக கூறப்படுகிறது. இருவருக்குமான செல்போன் உரையாடல் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
கார்மேகம் பேசுவது போன்ற அந்த உரையாடலில், நான் 42-வது வார்டு கவுன்சிலர் பேசுகிறேன். மோடி திட்டத்தில் பிளான் வாங்காம வீடு கட்டியிருக்கீங்க, பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும்போது என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணுமா, வேண்டாமா, நான் கவுன்சிலர், என்னை கேட்காமல் வீடு கட்டக்கூடாது. நீ நேரில் வா பேசுவோம் என்கிறார்.
மணிகண்டன் பேசுவதுபோல் உள்ள அந்த உரையாடலில், ‘நாங்க வீடு கட்டுவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்க கவுன்சிலர் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?’ என கேட்கிறார். தொடர்ந்து இருவரும் ஒருமையில் பேசிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் மதுரை மாநகர் பாஜக தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் மணிகண்டன் வீட்டுக்கு நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டனர். கவுன்சிலரின் கணவரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் மகா சுசீந்திரன் கூறுகையில், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீட்டுக்கு பிளான் அப்ரூவல் தேவையில்லை. 350 முதல் 500 சதுர அடி வரை எப்படி வேண்டுமானாலும் வீடு கட்டிக் கொள்ளலாம். இதை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உறுதி செய்தால்போதும். இதைத்தவிர வேறு எந்த நிபந்தனையும் இல்லை. இத்திட்டம் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். திட்ட நிதி இடைத்தரர்களின் கைகளுக்கு போகக்கூடாது என்பதற்காக திட்டத்துக்கான நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
மத்திய அரசின் திட்டத்தில் வீடு கட்டியவர்களிடம் திமுக கவுன்சிலரின் கணவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்தால் மதுரை மாநகராட்சியில் மக்களைத் திரட்டி பாஜக போராட்டம் நடத்தும்.
பயனாளியை மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் அளிக்கப்படும். மதுரை மாநகராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்ய பாஜகவில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT