Last Updated : 18 Dec, 2016 01:46 PM

 

Published : 18 Dec 2016 01:46 PM
Last Updated : 18 Dec 2016 01:46 PM

விளையாட்டில் பின்தங்குகிறது புதுச்சேரி: 8 ஆண்டுகளாக தடகளப் போட்டியில் எந்தப் பதக்கமும் இல்லை

புதுச்சேரி கல்வியில் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்காக இலவச கல்வி உதவித்தொகை, பாடநூல், சீருடை உள்ளிட்ட கல்விக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மருத்துவம், பொறியியல் என்று உயர்கல்வி பயிலும் மாணவர் களுக்காகவும் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்படுகிறது.

அதே வேளையில் விளையாட்டில் புதுச்சேரி மாநிலம் மிகவும் பின்தங்கியே உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் விளையாட்டுக்கு என்று தனித் துறை செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மாநில அரசுகள் தனிக்கவனம் செலுத்துகின்றன. ஆனால் புதுச்சேரியில் பள்ளிக் கல்வித்துறையின் ஒரு அங்க மாகவே விளையாட்டுத்துறை இருந்து வருகிறது. இதனால் விளையாட்டுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் முக்கியத்துவம் இல்லாமலேயே போகிறது.

உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் மட்டுமே புதுச்சேரியில் உள்ளது. வேறு எங்கும் விளையாட்டு மைதானம் இல்லை. இதையும் அரசு முறையாக பராமரிப் பதில்லை. கடந்த 6 ஆண்டுகளாக மைதானத்தின் புல்தரை காய்ந்து மணல் மேடாக காட்சியளிக்கிறது. புழுதி பறக்கும் மண்ணில் வீரர்கள் பயிற்சி பெற வேண்டிய அவலம் தொடர்கிறது. கடந்த ஆண்டு கூட தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மைதானம் முறையாக பராமரிக் கப்படாததால் கீழே விழுந்து இறந்த சோக நிகழ்வும் நடந்துள்ளது. இந்த மைதானத்தில் புல்தரை உருவாக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி பூமி பூஜையும் நடத்தப்பட்டது. பின்னர் எந்த பணிகளும் நடக்கவில்லை.

தடகளத்தில் தடுமாறும் வீரர்கள்

தடகள வீரர்களுக்காக இந்திரா காந்தி மைதானத்தில் ஓடுதளம் அமைக்கப் பட்டுள்ளது. இதனையும் முறையாக பராமரிக்காததால் ஓட்டப்பந்தைய வீரர்கள் முறையான பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. இதனால் மாநில அளவில் தேர்வாகும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியாமல் போகிறது. புதுச்சேரியில் தடகளத்தில் தேசிய அளவில் பதக்கம் வென்று 8 ஆண்டுகள் ஆகின்றன. விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மாறி சான்றிதழ் பெற்றால் மட்டும் போதும் என்ற மனநிலைக்கு மாணவர்கள் மாறி வரும் சூழல் நிலவி வருகிறது.

ராஜிவ் காந்தி விளையாட்டு பள்ளி

இந்திராகாந்தி விளையாட்டு மைதானத் திலேயே இயங்கி வரும் ராஜிவ்காந்தி விளையாட்டு பள்ளியில் தற்போது 93 மாணவர்கள் வரை தடகளம், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கிருந்து சிறந்த வீரர்களை தேர்வு செய்ய முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், இவர்களுக்கு கடந்த 3 ஆண்டு களாக சீருடை, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட வில்லை. நிதி நெருக்கடியை காரணம் காட்டி தட்டிக்கழிப்பதாக வேதனை யுடன் தெரிவிக்கின்றனர்.

இரண்டாம்தர விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை

தேசிய அளவில் ஹாக்கி, தடகளம், கைப்பந்து, கால்பந்து போன்ற விளை யாட்டுக்கள் இருக்கின்றன. இந்த விளை யாட்டுக்களில் கடும் போட்டிகளும் நிலவுகின்றன. இதில் பதக்கங்கள் வெல்வது என்பதே அரிதான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு தேசிய அளவிலான விளையாட்டுகளில் வெற்றி பெற்று பதக்கம் வெல்லும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், இரண்டாம்தர விளையாட்டான அட்டியா பட்டியா போன்ற விளையாட்டிற்கு புதுச்சேரி அரசு முன்னுரிமை அளிப்பதோடு, அரசு பணிகளிலும் முன்னுரிமை அளிக்கப் படுகின்றன.

தடைபோடும் பள்ளிகள்

மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டினாலும் அதை ஊக்கப்படுத்தாமல் பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் விளையாட தடைபோடுகின்றன. மாநில, தேசிய அளவிலான விளையாட்டுகளுக்கு அனுமதி அளிப்பதில்லை. தேர்வு முடிவுகளில் முன்னிலை பெறுவதற்காக படிப்பில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். இதனால், இளம் விளையாட்டு வீரர்களும் உருவாகாமல் மறந்து விடுகின்றனர்.

எனவே, புதுச்சேரியை பொருத்தவரை விளையாட்டு என்பது பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. சிறந்த வீரர்களை உருவாக்கவோ, சாதிக்க வழிவகுக்கவோ அரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதே விளையாட்டில் ஆர்வமுடைய மாணவர்களின் கருத்தாக இருக்கிறது.

இதுகுறித்து விளையாட்டுத்துறை ஆசிரியர்களிடம் கேட்டபோது, ''விளை யாட்டில் ஜார்கண்ட், உத்தராஞ்சல் போன்ற மாநிலங்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஆனால் புதுச்சேரியில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க கூட மாணவர்கள் ஆர்வம் காட்டு வதில்லை.

அரசு பள்ளிகளில் கூட போதிய விளையாட்டு மைதானங்கள் இல்லை. உப்பளத்தில் இருக்கும் ஒரு மைதானமும் சரியாக பரா மரிக்கப்படுவதில்லை. இதே நிலை தொடர்ந்தால் புதுச்சேரியில் விளை யாட்டு என்ற ஒன்று காணாமல் போய்விடும்.'' என்கின்றனர்.

புதுச்சேரி கல்வித்துறையிடம் இருந்து தனித் துறையாக விளையாட்டுத் துறையை பிரித்து போதிய நிதி ஒதுக்கி விளை யாட்டுகளை ஊக்கவிக்க வேண்டும் என்று பெற்றோரும் விளையாட்டில் ஆர்வமுடைய ஆசிரியர்களும் விரும்புகின்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x