Published : 21 Nov 2022 04:16 PM
Last Updated : 21 Nov 2022 04:16 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் வெள்ளத்தில் உடைந்த படுகை அணைக்கு முதலாண்டு நினைவு அஞ்சலி போஸ்டரை கிராம மக்கள் வெளியிட்டுள்ளனர்.
புதுவை திருக்கனுாரை அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தில் 1905-ல் பிரெஞ்சு ஆட்சியில் படுகை அணை கட்டப்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயம், குடிநீர் தேவை பூர்த்தியானது. போதிய பராமரிப்பின்றி 2016-ல் படுகை அணை நடுப்பகுதியில் சிறிய உடைப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சீரமைப்பு செய்யாமல், மணல் மூட்டைகளை அடுக்கிவைத்தனர்.
கடந்த ஆண்டு கனமழையின்போது பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையின் நடுப்பகுதியில் 140 மீட்டர் உடைந்தது. இதனால் தண்ணீர் முழுமையாக வெளியேறி கடலில் கலந்து வீணானது. தொடர்ந்து பணிகள் நடக்கவில்லை. தற்போதும் பொழிந்த மழைநீர் சேகரிக்கப்படவில்லை. படுகை அணை உடைந்து நவம்பர் 20-ம் தேதியுடன் ஓராண்டாகிறது.
இதையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் செல்லிப்பட்டு படுகை அணைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி என போஸ்டர் தயாரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில் படுகை அணை படத்துடன், 'அடையாளம் கொடுத்தவன் நீ, தாகம் தீர்த்தாய் தண்ணீராக, என்றும் இருப்பாய் கண்ணீராக' என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் 'நீ மறுபிறவிகொண்டு வருவாய் என்று நீங்காத நினைவுடன் என்றும் கிராம மக்கள்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT