Published : 21 Nov 2022 04:10 AM
Last Updated : 21 Nov 2022 04:10 AM
கோவை: சமூக வலைதளங்களில் மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அவதூறு தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமீபகாலமாக சமூக வலைதளங்கள் மூலமாக கோவை மாநகரில் நடந்ததாக தெரிவித்து அவதூறு தகவல் சமூகவிரோதிகளால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவலில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவதற்காக மாற்று மதத்தை சார்ந்த நபர் அவரது வகுப்பு தோழி மூலமாக முயற்சி செய்ததாகவும் இந்த விவரம் தெரிந்து அந்த பெண் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்து, டெல்லியில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை இணைத்து மதவெறுப்பை ஏற்படுத்தும் வகையில் செய்தி பகிரப்பட்டு வருகிறது.
கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மைத்தன்மையற்றது. இதுபோன்ற சம்பவம் நடந்ததாக தெரியவில்லை. புகாரும் இதுவரை வரவில்லை. ஏதோ ஆதாயம் பெறும் உள்நோக்கத்துடன் சமூகவலைதளங்களில் யாரோ சிலர் பகிர்ந்து வருவதாக தெரிகிறது. இது போன்ற மதத்துவேசத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற நோக்கில் பொய்யான தகவல்களை பரப்புவோர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT