Published : 02 Nov 2016 02:55 PM
Last Updated : 02 Nov 2016 02:55 PM

திருப்பூரில் நடுத்தர குடும்பங்களில் உருவெடுத்த முன் மாதிரி தேர்வர்கள்: வெற்றி பெறும் கூட்டு முயற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 4 தேர்வு, வரும் 6-ம் தேதி நடைபெறுகிறுது. இத்தேர்வை, லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுத உள்ளனர். இவர்களில், கடந்த 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்கு தன்னார்வலர்கள் குழுவாக இருந்து, திருப்பூரில் படித்து வருவது வேறு எங்கும் காண இயலாத ஒன்றாக உள்ளது.

இதுகுறித்து பத்மநாபன் என்ற தேர்வர் கூறும்போது, “திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வேளாண்மை விற்பனைக் கூடத்தில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செயல்பட்டு வந்தது. அப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு இலவசப் பயிற்சிக்கு வந்த தேர்வர்கள் சிலர், பயிற்சி வகுப்பு போக எஞ்சிய நேரங்களில் ஒன்றாக இணைந்து படித்துவிட்டு, மாலை நேரங்களில் வீட்டுக்குச் செல்வார்கள்.

இப்படி மெல்ல, மெல்ல நண்பர்கள் ஆனோம். பின்னர் அனைவரும் இணைந்து, கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்திலேயே முழு நேரமாக படித்துக்கொண்டிருக்கிறோம். காலை 9 மணிக்குத் தொடங்கினால், இரவு 8 மணி வரை தொடர்ந்து படிப்போம். படிக்கும்போது பல்வேறு சந்தேகங்களை சக தேர்வர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என, எங்களின் எல்லை விரிய ஆரம்பித்தது.

முதல்கட்டமாக, இளம் பெண்கள், திருமணமானவர்கள் உட்பட 30 பேர் முழு நேர வேலையாக படிப்பில் இறங்கினோம். எங்களைப் பார்த்து, 25-க்கும் மேற்பட்டோர் படிக்க வந்துள்ளனர். தற்போது 50-க்கும் மேற்பட்டோர் படிக்கிறோம். போட்டித் தேர்வுக்கான பாடப் புத்தகங்களை பகிர்ந்து கொண்டோம். இது நாளடைவில், தேர்வுகளில் நல்ல முன்னேற்றத்தை காட்டுகிறது.

இங்கு செயல்பட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய கட்டிடத்துக்குச் சென்றதும் கிடைத்த அமைதியான சூழ்நிலையால், இங்கேயே படிப்பைத் தொடர்ந்தோம். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் படிக்க வந்துவிடுவோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் யாரும் இருக்கமாட்டோம். மாறாக, திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி ‘மரத்தடி இலவச பயிற்சி மையத்தில்’ படிக்கச் செல்வோம். அதேபோல், ஈரோடு நந்தா கல்லூரி அளிக்கும் இலவச பயிற்சிக்கும் செல்வோம். அந்த அளவுக்கு போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைந்துள்ளோம்” என்றார்.

போட்டித் தேர்வுகளில் தொடர்ந்து வெற்றிபெற்றுவரும் வசந்தி கூறும்போது, “நான் திருப்பூர் நல்லூரில் இருந்து வந்து, இங்கு படிக்க ஆரம்பித்தேன். கிராம நிர்வாக அலுவலர், குரூப் - 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். இங்கு படிக்க வந்தவர்களில், இதுவரை குரூப் - 2 தேர்வில் 4 பேரும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் 6 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளோம்.

நண்பர்கள் சிலர், தங்களது பின்னலாடை நிறுவன வேலையை உதறிவிட்டு, இங்கு வந்து படிக்கின்றனர். அனைவரும் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். போட்டித் தேர்வுக்காக கஷ்டப்படும் அனை வரும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் தவிர, பிற போட்டித் தேர்வுகளுக்கும் படிக்கிறோம்.

எங்களுக்குள் பாடங்களைப் பிரித்து கேள்வி தயாரித்து, ஒவ்வொரு தேர்வுக்கும் முன்னதாக மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கிறோம். அதில் கிடைக்கும் மதிப்பெண்களை பட்டியல் இடுகிறோம்.

சாதனை

திருப்பூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் குரூப் - 2 தேர்வில் வெற்றி பெற்று, காங்கயத்தில் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல, 3 பேர் கடந்த ஜனவரி மாதம் வெளியான குரூப் - 2 தேர்வில் வெற்றி பெற்று, பணி உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்ச்சி பெற்ற 6 பேரும், பணி உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இப்படி பழைய ஆட்சியர் அலுவலகத்துக்கு படிக்க வரும் எங்களுக்குள், சனிக்கிழமை நாட்களில் மாதிரித் தேர்வுகள் நடத்துகிறோம். இதைப் பார்த்து விட்டு தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேர்வு எழுத வருகிறார்கள்.

இது, எங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x