Published : 20 Nov 2022 06:17 PM
Last Updated : 20 Nov 2022 06:17 PM
புதுச்சேரி: சோதனை எலியாக புதுச்சேரியை மத்திய அரசு பயன்படுத்துகிறது. மாநில அந்தஸ்துக்காக மாநாடு, பிரச்சார இயக்கம், போராட்டம் நடத்த உள்ளதாக முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர்.
புதுவை மாநில அந்தஸ்து பெற சமூக அமைப்புகள் ஆலோசனைக் கூட்டத்தை சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு இன்று கூட்டினார். இதில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இருவரும் முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சைகள். இக்கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில் சுயேட்சை எம்எல்ஏக்கள் நேரு, பிரகாஷ்குமார் மற்றும் அமைப்பினர் ஆகியோர் கூறியதாவது: ''மத்தியில் ஆட்சி செய்யும் அரசுகள் புதுவையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை. மத்திய அரசு புதிதாக கொண்டு வரும் திட்டங்களை யூனியன் பிரதேசமான புதுச்சேரியை ஆய்வு செய்யும் எலியாக பயன்படுத்துகின்றனர். அந்த திட்டம் மக்களுக்கு பயனளிக்குமா என ஆராய கூட நேரம் கொடுப்பது இல்லை. அரசு கொண்டு வரும் திட்டங்களை அதிகாரிகள் செயல்படுத்துவது இல்லை.
யூனியன் பிரதேசமாக புதுவையை வைத்திருப்பதால் நமது மாநிலம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. எனவே புதுவை தனி மாநில அந்தஸ்து பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் 11 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களால் தேர்வான முதல்வர் அதிகாரத்தை பறிக்கும் விதமாகவே அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த ஆளுநரும், தலைமைச் செயலரும், ஐஏஎஸ் அதிகாரிகளும் தடையாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மிசோரம், சிக்கிம் மாநிலங்களுக்கு மாநில தகுதி இருக்கும்போது 14 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராதது வியப்பளிக்கிறது. இதற்கு ஒரே தீர்வு புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து தான். தனி மாநில அந்தஸ்து பெற இந்த கூட்டத்தில் முதல் கட்டமாக மாநாடு நடத்துவது, அடுத்த படியை மக்களை சந்தித்து பிரசார இயக்கம் நடத்துவது, தொடர்ந்து மாபெரும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT