Published : 20 Nov 2022 04:46 PM
Last Updated : 20 Nov 2022 04:46 PM

'மாணவி பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் தவறு இல்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை: கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்தில், அறுவை சிகிச்சை செய்ததில் எந்த தவறும் இல்லையென்றும், இனிவரும் காலங்களில் அறுவை சிகிச்சையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அப்பாவு நகர் மற்றும் சுப்புபிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு மறு குடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மாணவி பிரியா மரணத்திற்கு அறுவை சிகிச்சையில் நிகழந்த தவறுதான் காரணமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அறுவை சிகிச்சையில் தவறு இல்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு Compression Band என்ற சொல்லப்படக்கூடிய கட்டுப் போடப்பட்டுள்ளது.

இந்த கட்டு இரத்தப் போக்கை நிறுத்துவதற்கானது. மாணவியின் மூட்டு ஜவ்வினை அறுவை சிகிச்சை செய்தபோது, இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு Compression Band போடப்பட்டுள்ளது. அதை உடனடியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்றியிருக்க வேண்டும். கவனக்குறைவு, அலட்சியம் காரணமாக அது அகற்றப்படவில்லை. மருத்துவர்கள் மீது அதற்கான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போல, ஒவ்வொரு அறுவை சிகிச்சையின் தணிக்கை, ஒவ்வொரு அறுவை சிகிச்சையின் போதும் தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் அங்கு செய்யப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து வரும் 23-ம் தேதி அரசு மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தின் இறுதியில், அறுவை சிகிச்சையின்போது பின்பற்றிய வேண்டிய வழிமுறைகளாக வெளியிட இருக்கிறோம்.'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x