Published : 20 Nov 2022 03:37 PM
Last Updated : 20 Nov 2022 03:37 PM

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் முருகர் திருத்தேர் வெள்ளோட்டம் திடீர் ரத்து

திருவண்ணாமலை தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முருகர் திருத்தேர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட முருகர் திருத்தேர் பலவீனமாக இருப்பதாக பொதுப்பணித் துறை எச்சரிக்கை விடுத்ததால் இன்று(20-ம் தேதி) நடைபெற இருந்த வெள்ளோட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் 24-ம் தேதி இரவு தொடங்குகிறது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவத்தை தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் வரும் 27-ம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற உள்ளன. அதன்பிறகு, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் மாட வீதியுலா உற்சவம் ஆரம்பமாகிறது.

கார்த்திகைத் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில், டிசம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள மகா தேரோட்டம் முக்கியத்துவம் பெற்றதாகும். விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் தனித்தனியே எழுந்தருளி, தனித்தனித் திருத்தேர்களில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். ஒவ்வொரு திருத்தேரும் நிலைக்கு வந்த பிறகு, அடுத்த திருத்தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கி இரவு வரை, ஓரே நாளில் ஐந்து திருத்தேர்கள் பவனி வர உள்ளது சிறப்புமிக்கது.

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, மகா தேரோட்டம் நடைபெறவில்லை. இதனால், முருகர் திருத்தேரில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருத்தேரின் மேற்பகுதி, புதியதாக அமைக்கப்பட்டன. இப்பணி நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, முருகர் தேர் வெள்ளோட்டம், இன்று(நவம்பர் 20-ம் தேதி) காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்தது. இதற்கிடையில், திருத்தேர் பலவீனமாக இருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து இன்று(20-ம் தேதி) நடைபெற இருந்த முருகர் திருத்தேர் வெள்ளோட்டத்தை கோயில் நிர்வாகம் திடீரென ரத்து செய்துள்ளது.

முருகர் திருத்தேரை பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று(19-ம் தேதி) ஆய்வு செய்தனர். இதில், திருத்தேர் பலவீனமாக இருப்பதை உறுதி செய்து சான்று வழங்கி உள்ளனர். உயரம், அகலம் மற்றும் எடை ஆகியவற்றை தாங்கும் திறன் திருத்தேரின் அடித்தளத்தில் இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தூண்களில் விரிசல், இணைப்பு பகுதிகள் சரியாக இல்லாமல் இருப்பது போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முருகர் திருத்தேரில் ஸ்திரத்தன்மையுடன் இல்லை என்பதால், வெள்ளோட்டம் நடைபெற்றால் ஆபத்து என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பலவீனமாக உள்ள பகுதிகளை சரி செய்த பிறகே, வெள்ளோட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோயில் இணை ஆணையர் அசோக்குமார் கூறும்போது, ''முருகர் திருத்தேர் புதுப்பிக்கப்பட்டு இன்று(20-ம் தேதி) வெள்ளோட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சில இடங்கள் பலவீனமாக இருப்பதாக கூறி உள்ளனர். அவர்கள் சுட்டிக்காட்டிய பகுதிகள் மீண்டும் சீரமைக்கப்படும். அதன்பிறகே வெள்ளோட்டம் நடைபெறும்'' என்றார்.

ஸ்திரத்தன்மையை உறுதி செய்க: கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற இருந்த முருகர் திருத்தேர் வெள்ளோட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவர்கள் கூறும்போது, ''அவசர கதியில் திருத்தேர் புதுப்பிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதன் தாக்கத்தின் எதிரொலியாக, வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக பஞ்ச ரதங்கள் இயக்கப்படாததால் மகா தேரோட்டத்துக்கு முன்பாக ஐந்து (பஞ்சரதம்) திருத்தேர்களையும் மீண்டும் ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x