Last Updated : 20 Nov, 2022 03:08 PM

 

Published : 20 Nov 2022 03:08 PM
Last Updated : 20 Nov 2022 03:08 PM

பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தது ஏன்? - நாராயணசாமி விளக்கம்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்.

புதுச்சேரி: பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தது ஏன் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி விளக்கம் தந்துள்ளார். ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை திமுக வரவேற்று கொண்டாடுவது மன வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம், தற்போது மத்திய அரசு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி அரசுக்கு நன்றி தெரிவித்ததை பலர் விமர்சனம் செய்கிறார்கள். எதிரிகள் நல்லது செய்தால் அவர்களை பாராட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் கருத்து தெரிவித்திருந்தேன்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் டெல்லி சென்று எங்கள் தரப்பிலும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியுமா என விசாரித்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலையை திமுக உள்ளிட்ட சில கட்சிகள் கொண்டாடி வருவது மன வருத்தத்தை அளிக்கிறது, திமுக ஆதரவு தருவது நிர்பந்தமே தவிர, கட்சியின் கொள்கை கிடையாது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் தொடர்ந்து போராட்டம் நடக்கும், புதுவையில் உள்ள மத சார்பற்ற அணி தரப்பில் அனைவரும் இணைந்து விவாதித்து நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய தி்ட்டமிட்டுள்ளோம். மக்களுக்கு வலி இல்லாமல் வரி உயர்வு தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார், தற்போது வியாபாரிகளும் மக்களும் விலைவாசி உயர்வால் கடும் பாதிப்பில் உள்ளனர்.

தற்போது முதல்வர் வரி உயர்த்துவது வலி இல்லாமல் விஷ ஊசி போடுவது போலத்தான். புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனங்கள் மூடுவதற்கு ஊழியர்கள் தான் காரணம் என முதல்வர் பேசியுள்ளார். புதுவை கூட்டுறவு நிறுவனங்களில் கொல்லைப்புறமாக ஆட்களை நியமித்தது, 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர்களை பான்லேவில் மேலாளர், துணை மேலாளர் பதவிக்கு அமர்த்தியது ஆகியவையே காரணம். கூட்டுறவு நிறுவனங்கள் பாழானதற்கு ரங்கசாமிதான் காரணம். நிர்வாக கோளாறு, ஊழல் ஆகிறவற்றுக்கு அவர்தான் காரணம். கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்ததற்கு முதல்வரே முழு காரணம்.

உள்ளாட்சித்துறை தற்போது 19 ஆண்டுகளுக்கு குப்பை அள்ளுவதற்கு டெண்டர் வெளியிட்டுள்ளது. இதற்காக அந்நிறுவனத்திற்கு ரூ.220 கோடி வழங்க வேண்டி வரும். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக காலத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது கிடையாது. குறைந்தபட்சம 5 முதல் 7 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்படும். இது மிக பெரிய ஊழல் இதற்கு பின்னனியில் முதல்வர் அலுவலகம் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x