Published : 20 Jul 2014 09:12 AM
Last Updated : 20 Jul 2014 09:12 AM

சிறுத்தையை உயிரியல் பூங்காவில் பராமரிக்க வேண்டும்: சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை

திம்பம் பகுதியில் மனித ரத்தத்தின் சுவையைக் கண்டுவிட்ட சிறுத்தையைப் பிடித்து உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்க வேண்டும்; அதை மீண்டும் வேறு எந்த வனப் பகுதியிலும் விடக்கூடாது என்று சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

கடந்த வியாழக்கிழமை இரவு திம்பம் வனச்சோதனை சாவடியில் பணியில் இருந்த வனக்காவலர் கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது. அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் அவரது கழுத்துப் பகுதியை சிறுத்தை தின்றுவிட்டு, அவரது உடலை மறைவாக எடுத்து வைத்ததை உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட சிறுத்தை மனித ரத்தத்தின் உப்புச்சுவை மற்றும் மாமிச சுவைக்கு கிட்டத்தட்ட அடிமையாகிவிட்டது என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் வாகன உதிரிபாகங்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்தது. அதில் இருந்த விலை உயர்ந்த உதிரி பாகங்கள் வனப்பகுதிக்குள்ளேயும் சிதறிக் கிடந்தன. அதனை திருடுவதற்காக நள்ளிரவில் மூன்று பேர் வந்தனர். அவர்கள் குனிந்து உதிரி பாகங்களை சேகரித்துக் கொண்டிருக்கும்போது மான் அல்லது அதன் உயரத்தில் வேறு ஏதேனும் இரை விலங்காக இருக்கலாம் என்று கருதிய சிறுத்தை அந்த நபரை தாக்கிக் கொன்றது. சிறுத்தையைப் பொறுத்தவரை இது ஒரு விபத்து.

இதில் மனித ரத்தத்துக்கு அடிமையாகிவிட்ட அந்தச் சிறுத்தை தற்போது வனத்துறை ஊழியரை தாக்கிக் கொன்று தின்றிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி பகுதியில் மனிதர்களை தொடர்ச்சியாக கொன்ற புலிக்கும், இப்போது திம்பம் வனச்சோதனை சாவடி பகுதியில் உலவும் சிறுத்தைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கட்டாயமாக இந்த சிறுத்தையும், அது கொன்று பதுக்கி வைத்த உடலைத் தேடி வரும். அந்த இடத்தில் தற்போது வனத்துறையினர் கூண்டு வைத்திருக்கின்றனர். ஒருவேளை அதில் சிக்காமல் போகும்பட்சத்தில் அந்தச் சிறுத்தை கண்ணுக்கு சிக்கும் மனிதர்களை தாக்கிக் கொல்ல முற்படும்.

ஏற்கெனவே நீலகிரியில் மனிதர்களை தாக்கிக் கொன்ற புலியை அதிரடி படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது. புலியை கொன்றது சரிதான் என்றும், இல்லை தவறு என்றும் தொடர் விவாதங்கள் நடந்தன. எனவே, இம்முறை அதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடம் தராமலும், அதேசமயம் மேலும் ஒரு மனித உயிர் பலியாகாமலும், விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுதையைப் பிடிக்க வேண்டும்.

அவ்வாறு சிறுத்தையைப் பிடித்த பின்பும் அதை மீண்டும் வேறு வனப்பகுதியில் விடுவதும் தவறு. அப்படி விட்டால் அது மீண்டும் மனிதர்களை வேட்டையாடவே முற்படும். வண்டலூர் உயிரியல் பூங்காவில் போன்ற கண்காட்சி பூங்காக்களில் அதை கூண்டில் அடைத்து வைத்து பராமரிப்பதே சரியாக இருக்கும்.

அப்போதுகூட அதற்கு இரை போட்டு பராமரிக்கும் ஊழியர் மற்றும் அதைப் பார்க்க வரும் பார்வையாளர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் புலி அல்லது சிறுத்தை போன்ற விலங்குகளின் வாழ்வில் ஒருமுறை மனிதரை கொல்ல நேரும் விபத்து அதன் வாழ்நாள்தோறும் பெரும் சாபமாக அமைந்துவிடுகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x