Published : 15 Nov 2016 01:00 PM
Last Updated : 15 Nov 2016 01:00 PM
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொக்லைன் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், தொழிலைவிட்டே போய்விடும் சூழல் நிலவுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மாவட்டத்தில் அதிகரிக்கும் பிரம்மாண்ட கட்டிடங்களால், மண் அரிப்பு ஏற்பட்டு, எதிர்காலத்தில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அடங்கிய ‘மாஸ்டர் பிளான் சட்டம்’ இந்த மாவட்டத்தில் நீண்டகாலமாக அமலில் உள்ளது. எனினும், 3 முதல் 4 அடுக்குமாடி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்படுகின்றன. கிராமப் பகுதிகளிலும் தற்போது விதிமீறல்கள் அதிகரித்துள்ளன.
இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மண் அரிப்பால் நிலச்சரிவு ஏற்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, பொக்லைன் வாகனங்களைப் பயன்படுத்தப்பட வேண்டுமெனில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது.
இந்த விதிமுறையின்படி பொக்லைன் பயன்படுத்த விரும்புவோர், அது பயன்படுத்த உள்ள நிலத்தின் சர்வே எண், நோக்கம் உள்ளிட்ட விவரங்களுடன், 15 நாட்கள் முன் ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவை கோட்டாட்சியருக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் அறிக்கை பெற்று, தனது பரிந்துரைகளுடன் ஒரு வாரத்தில் ஆட்சியருக்கு, கோட்டாட்சியர் அறிக்கை அனுப்புவார். அதன்பேரில் ஆட்சியரால் அனுமதி வழங்கப்படும். பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்படும் பொக்லைன் வாகனங்களை சோதனைச் சாவடியில் ஆய்வு செய்து, உரிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்படும்.
அதேபோல, பணிகள் ஏதுமின்றி மாவட்டத்தைக் கடந்து செல்ல வேண்டிய வாகனங்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிப்பர். விதிமுறைகளை மீறி இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு என்று 6 ஆண்டுகளுக்கு முன்பே மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், பொக்லைன் வாகனங்களைப் பயன்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
நீலகிரியில் பொக்லைன் வாகனங்களை வைத்துள்ள சிலர் கூறியது: நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பொக்லைன் வாகனங்களை இயக்கி வருகிறோம். ஆனால், இதுபோன்ற தொடர் நெருக்கடிகளை எப்போதும் சந்தித்ததில்லை. பொக்லைன் வாகனத்தை ஒரு மணி நேரத்துக்கு இயக்க ரூ.800 மற்றும் டிரைவர் பேட்டாவாக ரூ.50 பெறுகிறோம். அதில் பாதி தொகை, டீசல் மற்றும் வண்டி பராமரிப்புக்குப் போய்விடும்.
மேலும், வாகனத்தை இயக்கும் அனுமதிக்கு கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர் வரை லஞ்சம் தரவேண்டியுள்ளது. சுமார் 1,000 சதுர அடியில் வீடு கட்ட விரும்பும் உரிமையாளர், அவரது பட்டா நிலத்தில் மண் எடுக்கும் அனுமதியைப் பெற, ரூ.1 லட்சம் வரை லஞ்சம் தர வேண்டும். அப்போதுதான், அலுவலர்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து, அனுமதி பரிந்துரையை ஆட்சியருக்கு அனுப்புகின்றனர்.
அதேபோல, வாகன உரிமையாளர்களும் பதவிக்கு தகுந்தாற்போல ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் தர வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, லஞ்சம் தராத உரிமையாளரின் பொக்லைன் வாகனத்துக்கு அனுமதி தராமல், லஞ்சம் கொடுப்பவரின் வாகனத்தைப் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றனர். மேலும், லஞ்சம் கொடுக்காதவரின் வாகனம் செயல்படாமல் இருந்தாலும், மண் அள்ளியதாகக் கூறி வழக்கு பதிவு செய்கின்றனர்.
இதுதவிர, நாங்கள் லஞ்சம் கொடுத்தாலும், மண் எடுக்க வரும் டிப்பர் லாரிகளிடமும் வசூலித்து விடுகின்றனர். அவர்களும் ஒரு இடத்தில் மண் எடுக்க லாரிக்கு ரூ.20 ஆயிரம் வரை லஞ்சம் அளிக்க வேண்டியுள்ளது. இதில் இடைத்தரகர்களும் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
வாகன உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, பணம் தராவிட்டால் மண் எடுத்ததாக மேலிடத்துக்கு புகார் அனுப்புவது என இடைத்தரகர்களின் அத்துமீறல் தொடர்கிறது. அவர்களை சார்ந்தே தொழில் செய்ய வேண்டியுள்ளதால், இந்தப் பிரச்சினையை ஆட்சியரிடம் கொண்டுசெல்வதைத் தவிர்க்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 100-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் செயல்பட்டன. தற்போது, உதகையில் 20, கூடலூர், குன்னூரில் 10 முதல் 15 வாகனங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலை தொடர்ந்தால், மாவட்டத்தில் பொக்லைன் வாகனங்களைத் தேட வேண்டியிருக்கும் என்றனர்.
மேலும், மண் சரிவு, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பணிகளின்போது, பொக்லைன் வாகனங்களைப் பயன்படுத்தும் அதிகாரிகள், அதற்கான செலவு கணக்கை எழுதி, தாங்களே தொகையைப் பெற்றுக் கொள்வதாகவும், வாகன உரிமையாளர்களுக்கு டீசல் தொகையைக் கூட தருவதில்லை என்றும் புகார்கள் கூறப்படுகின்றன.
“அரசுப் பணிகளுக்கு நாங்கள் பணம் எதிர்பார்ப்பதில்லை. பட்டா நிலத்தில் முறையாக அனுமதி பெற்று மேற்கொள்ளும் பணிகளுக்கு, இவ்வளவு அதிகம் லஞ்சம் வாங்குவதுடன், மாதம் ஒரு வழக்கும் பதிவு செய்து, ரூ.80 ஆயிரம் வரை அபராதம் விதிக்கிறார்களே என்பதுதான் எங்களது வருத்தம்” என்றும் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரூ.80 ஆயிரம் அபராதம்?
இரு தினங்களுக்கு முன் வருவாய் ஆய்வாளரிடம் சிக்கித் தவித்த பொக்லைன் டிரைவர் கூறும்போது, “நான் 3 வாகனங்கள் வைத்துள்ளேன். ஒரு வாகனத்துக்கு நானே டிரைவராக செயல்படுகிறேன். ஆட்சியர் அனுமதியுடன் ஒருவர் வீட்டில் மண் எடுத்தபோது, அந்த அனுமதி செல்லாது என்று கூறி, மண் அள்ளிக் கொண்டிருந்த வாகனத்தை மட்டுமின்றி, அங்கு வெறுமனே நிறுத்தி வைத்திருந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அதற்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிப்பதாகக் கூறுகின்றனர். கடந்த மாதம்தான் மற்றொரு வாகனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபாரதம் கட்டினேன். அவர்கள் சொல்லும் வேலையை இலவசமாக செய்துதர வேண்டும். கேட்கும் லஞ்சத்தையும் கொடுக்கவேண்டும். இல்லையேல் சிக்கல்தான் என்றார்.
தொடரும் வழக்குகள்
கடந்த சில நாட்களுக்கு முன் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் தோண்டியபோது, வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு வந்து, டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்ததுடன், ரூ.51 ஆயிரம் அபாரதம் விதித்தனர். இரு மாதங்களுக்கு முன் இந்தப் பிரச்சினையில், உள்ளூர் பிரமுகர் கொலை மிரட்டல் விடுப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்டவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல, பந்தலூரிலும் வருவாய்த் துறை அலுவலர்களை மிரட்டியதாக, அரசியல் பிரமுகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு ஓரிரு ஆண்டுகளில் பொக்லைன் வாகனங்களை முன்வைத்து நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களுக்குப் பின்னால், மாமூல் பிரச்சினை இருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் வாகனம். (கோப்பு படம்).
‘புகார் வரவில்லை’
இது தொடர்பாக ஆட்சியர் பி.சங்கரிடம் கேட்டபோது, “பொக்லைன் உரிமையாளர் மற்றும் டிரைவர்களிடமிருந்து இதுவரை புகார் வரவில்லை. பாதிக்கப்படுவோர் எனது கவனத்துக்கு புகாரை கொண்டுவந்தால், நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
லஞ்சத்துக்கு ‘சின்டிகேட் ’?
இதுகுறித்து வருவாய்த் துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, “சில இடங்களில் இயந்திர வாடகை, அதிகாரிகளுக்கு லஞ்சம் என குறிப்பிட்ட தொகையை பொக்லைன் வாகன உரிமையாளர்கள் நிர்ணயிக்கின்றனர். இதில் அவர்கள் ‘சின்டிகேட்’ அமைத்துக்கொண்டு, இடைத்தரகர்போல செயல்பட்டு, லஞ்சம் வாங்கிக் கொடுப்பதாகவும் வாய்மொழிப் புகார்கள் வந்துள்ளன. தொழில் போட்டி காரணமாக, இந்த தொழிலில் உள்ள சிலரே, மற்றவர்களை சிக்கவைத்து, வழக்குப் போடச் செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT