Last Updated : 19 Nov, 2022 04:34 PM

3  

Published : 19 Nov 2022 04:34 PM
Last Updated : 19 Nov 2022 04:34 PM

“மக்களின் இன்றைய தேவை இந்துத்துவ - திராவிட மோதல்கள் அல்ல” - பாமக நிர்வாகி கே.பாலு நேர்காணல்

பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு

"ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினியை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அப்படி இருக்கும்போது, அவர் தனக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது" என தெரிவித்திருக்கிறார் பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு. ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்...

பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தச் சட்டம், அரசியல் ரீதியில் பாஜகவுக்கு எத்தகைய பலன்களை அளிக்க வாய்ப்பு இருக்கிறது?

நாடு முழுவதும் உள்ள SC, ST, OBC மக்களில் 90 சதவீதம் பேர் ஒடுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கிறார்கள். நாம் எந்த அளவு சமூகத்தில் பின்தங்கி இருக்கிறோம்; நமக்கு இருக்கும் சமூக நோய் என்ன; நமக்கு இருக்கும் இயலாமை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சமூக நிலையையும் கல்வி நிலையையும் உயர்த்த வேண்டும் என்பதுதான் சமூக நீதியின் அடிப்படைக் கோட்பாடு. அதை நிறைவு செய்யாமல், மக்களின் வாக்குகளைப் பெற முயல்வது தவறாகத்தான்போய் முடியும்.

SC பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், OBC பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு இன்னும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளை வகிக்க முடியாத நிலை உள்ளது. அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இன்றுவரை தலைவர் நியமிக்கப்படவில்லை. OBC பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறதா என்ற கேள்வியை உங்கள் மூலமாக நான் முன்வைக்க விரும்புகிறேன்.”

தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி பாஜகதான் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசியல் கட்சிகள் இவ்வாறு சொல்வது ஆச்சரியமானது அல்ல. இரண்டாவது கட்சியாகவோ, மூன்றாவது கட்சியாகவோ இருப்பது சிறப்பல்ல. ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கட்சிக்கும் கனவாக இருக்கும். அவர் அவரது கட்சிக்காக அப்படி சொல்கிறார். அதைப் பற்றி கருத்து சொல்ல நாங்கள் விரும்பவில்லை.

தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுவது பற்றி...

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் அடிப்படை. எனவே, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழும் உரிமை, சமூக உரிமை என அனைத்தும் வழங்கப்பட வேண்டும். அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என எந்த மதத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வழிபாட்டு முறையை பின்பற்றுவதற்கான வாய்ப்பை அரசு செய்து தர வேண்டும். இது தற்போது நடைமுறையில் உள்ளது. இந்துத்துவம் என்றும் திராவிடம் என்றும் கூறி கருத்து மோதல்கள் நடக்கின்றன. ஆனால், மக்களின் இன்றைய தேவை இதுவல்ல. உணவு, வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி இவற்றைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். விவாதங்கள் இவைபற்றி இருப்பதுதான் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கள் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இருப்பதாக திமுக குற்றம் சாட்டுகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாக சட்ட அமைச்சர் ரகுபதி கூறுகிறார். ஆளுநரின் செயல்பாடு பொதுவாக எவ்வாறு இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவை நிறைவேற்றுபவராகத்தான் இருக்க வேண்டும். அதற்கு மாறுபட்ட சிந்தனையோடு அவர் இருக்கக் கூடாது. 21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இவற்றில் ஏறக்குறைய 15 மசோதாக்கள் ஆளுநரின் அதிகாரத்தை குறைப்பது அல்லது நீக்குவது தொடர்புடையவை. ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவதும், மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்வதும் தவறான போக்கு.

சமீபத்தில் நிகழ்ந்த எழுவர் விடுதலை என்பதுமேகூட ஆளுநர் முடிவெடுக்காததால்தான், சரத்து 142ன் அடிப்படையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. ஆளுநர் என்பவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக, பொது நபராக, அனைவராலும் அவர் என்னுடைய பிரதிநிதி என்று சொல்லக்கூடியவராக இருக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பாமக எப்படி பார்க்கிறது?

உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி இருப்பதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தண்டனைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தற்போது உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு பின்பற்றப்படவில்லை. ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனினும், ஆளுநர் அதனை பரிசீலிக்கவில்லை. இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் அதனையும் பரிசீலிக்கவில்லை. எனவேதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

விடுதலைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நளினி, ராஜிவ் காந்தி கொலைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தான் நிரபராதி என்றும் கூறி இருக்கிறார். இதை எப்படி பார்ப்பது?

நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்துவிட்டது. அப்படி இருக்கும்போது இவ்வாறு கூறுவது உண்மையானதாகவோ ஏற்புடையதாகவோ இருக்காது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான் முழுமையானது. அந்த அடிப்படையில் இவர்கள் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு என்றும் விட்டுக்கொடுக்காது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறி வருகிறார். மத்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டத்தை கொண்டு வருகிறது. இதில் பாமகவின் நிலைப்பாடு என்ன?

நாங்கள் ஒருமொழிக் கொள்கையை முன்வைக்கிறோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. கல்வியைப் பொறுத்தவரை ஆங்கிலம் என்பது தொடர்பு மொழியாக இன்றைக்கு மாறிவிட்டது. எனவே, ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை; அதனை பயிற்றுவிப்பதிலும் எவ்வித தவறும் இல்லை. அதேநேரத்தில் ஆங்கிலத்தை பயிற்றுவிக்கிறோம் என்பதற்காக தமிழே பயிற்றுவிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிற்று மொழியாக தமிழ்மொழி இருக்க வேண்டும்.

அதேபோல், ஒரு மாணவர் எத்தனை மொழிகளை கற்க விரும்பினாலும் அதற்கான வாய்ப்புகளை, வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். எதிர்கால தமிழக இளைஞர்களுக்கு தமிழ் எழுத்து மொழியாக, பேச்சு மொழியாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் நமது கல்வித் திட்டம் இல்லை. எனவே, இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை விட்டுவிட்டு, தமிழகத்தின் கல்வித் திட்டம் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் 12ம் வகுப்பு வரை இங்கே படிக்க முடிகிறது. இது மாற்றப்படவேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் எங்கே தமிழ் என்ற தலைப்பில் தொடர் பதிவுகளை இட்டு வருகிறார். அதில், திராவிட இயக்கங்கள் தமிழை வளர்க்கவில்லை என்றும், மாறாக தமிழால்தான் திராவிட இயக்கங்கள் வளர்ந்துள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். திராவிடக் கட்சிகளின் மிக முக்கிய அரசியல் அடையாளம் தமிழ்மொழி. தமிழ்மொழியில் இருந்து திராவிட இயக்கங்களை பிரிப்பதற்கான அரசியல் உத்தி என இதை எடுத்துக்கொள்ளலாமா?

திராவிடக் கட்சிகள் தமிழுக்கு எதையும் செய்யவில்லை என்று அவர் கூறவில்லை. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் தமிழ் வளர்வதற்கும் பாதுகாக்கப்படுவதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கைகளை திராவிடக் கட்சிகள் மேற்கொள்ளவில்லை என்பதையே உதாரணங்களோடு பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டி இருக்கிறார். அவர் தனது முகநூல் பதிவில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் சட்ட அமைச்சகத்தின் கருத்தைக் கேட்க, பின்னர் அது உச்ச நீதிமன்றம் சென்றது. அதன் பிறகு தற்போதுவரை அடுத்தகட்ட நடவடிக்கை என்பது இல்லை.

உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும் என்றால், அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பட்டியல் அளித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஒன்றைக்கூட ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை. எனவே, திராவிடக் கட்சிகளின் தமிழ்ப் பற்று வெறும் பேச்சளவில் மட்டுமே வெளிப்படுகிறது. இதனை தேவையான, ஆக்கபூர்வமான விமர்சனமாகவே நாங்கள் முன்வைக்கிறோம்.

அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தில் நீங்களும் அவரோடு சென்றீர்கள். இப்படி ஒரு நடைபயணத்திற்கு திட்டமிடப்பட்டதன் பின்னணி என்ன?

நீர் மேலாண்மைக்கு நீண்ட காலமாக குரல் கொடுத்து வருபவர்கள் நாங்கள். நீர் மேலாண்மைக்கு என்று தனி அமைச்சகமே உருவாக்க வேண்டும் என்பதை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் தென் பகுதியாக இருக்கக்கூடிய தஞ்சை மாவட்டம் நீர் நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. அதேநேரத்தில் வட பகுதியாக இருக்கக் கூடிய அரியலூர் மாவட்டம் வறண்டு காணப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஏராளமான ஏரிகள் உள்ளன. இவை எல்லாம் சோழர் காலத்தில் 9 மற்றும் 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. குறிப்பாக, சோழ மன்னர் ராஜேந்திர சோழன், கங்கையில் இருந்து நீர் கொண்டு வந்து விட்டு உருவாக்கிய ஏரிதான் பொன்னேரி. சமீப காலத்தில் ஒருமுறைகூட இந்த ஏரி முழுமையாக நிரம்பியதில்லை.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்ப வேண்டுமானால் 8 டிஎம்சி தண்ணீர் தேவை. இந்த ஏரிகள் முழுமையாக தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டால் அதிகபட்சம் 18 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். ஆனால் கடந்த 3 மாதங்களில் மட்டும் 450 டிஎம்சி தண்ணீர் காவிரி வழியாகச் சென்று வீணாக கடலில் கலந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து இந்த தண்ணீர் அரியலூர் மாவட்ட நீர்நிலைகளுக்கு திருப்பிவிடப்படுமானால், ஆண்டு முழுவதும் முப்போக விவசாயம் செய்யலாம். மாவட்டமே செழிப்பாக மாறும்.

சோழ மன்னர்களின் தலைநகராக 270 ஆண்டுகள் இருந்த நகரம் கங்கை கொண்ட சோழபுரம். ஆனால், அந்த ஊர் மக்கள் தற்போது வேலை இல்லாமல் கூலி வேலைக்குச் செல்லும் நிலையில் இருக்கிறார்கள். பலர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். எனவே, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை மிகவும் அவசியம். இதற்கு சோழ மன்னர்கள் உருவாக்கிய ஏரிகளை தூர்வாரி, கொள்ளிடத்தில் இருந்து அவற்றுக்கு நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டது.

பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலுவின் நேர்காணலின் இரண்டாம் பகுதி வீடியோ வடிவில் இங்கே...

முந்தைய பகுதி: “பாமகவை சிறு வளையத்திற்குள் வைத்தே பார்க்கிறார்கள். இது மாற்றப்பட வேண்டும்” - கே.பாலு நேர்காணல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x