Published : 19 Nov 2022 06:10 AM
Last Updated : 19 Nov 2022 06:10 AM
திருப்பூர்: திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த சாயமிடுதல், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், பின்னலாடை சார்ந்து ஏராளமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். திருப்பூரில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிய நிலையில், அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை தொடங்கியதன் ஆரம்ப அறிகுறிதான், திருப்பூர் தொழில்துறையில் நிலவும் நெருக்கடி. ரஷ்யா - உக்ரைன் போர் இன்னும் தொடர்வதால், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மந்த நிலை பாதிப்புகள் வெளியே தெரியத் தொடங்கிவிட்டன என்கின்றனர், பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். இந்நிலையால் பணப்புழக்கம் குறைந்து, மக்களின் வாங்கும் திறனும் சரிந்து வருகிறது.
உச்சகட்டமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மக்கள் தாங்கள் வாங்கும் ஆயத்த ஆடைகளை ஒன்று அல்லது இரண்டு முறை அணிவது என்ற நிலைமாறி, தற்போது மூன்று அல்லது நான்கு முறைக்கு மேல் அணிவது அதிகரித்துள்ளதாகவும், பொருளாதாரம் மீண்டு வரும்வரை இது தொடரும் என்றும் கூறப்படுகிறது. இதே நிலைதான் அமெரிக்கா, பிரிட்டன் சந்தையிலும் எதிரொலிக்கிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டு ஜூலையில் 0.60 சதவீதமும், ஆகஸ்ட் மாதத்தில் 0.34 சதவீதமும், செப்டம்பரில் 18.06 சதவீதமும், அக்டோபரில் 21.16 சதவீதமும் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு, ஏற்றுமதி வர்த்தகம் சார்ந்த தரவை வெளியிட்டுள்ளது. அதில், ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த 2021-22 நிதி ஆண்டு செப்டம்பரில் 130 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், நடப்பாண்டு செப்டம்பரில் 106.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் 18.06 சதவீதமும், கடந்த ஆண்டு அக்டோபரில் 125.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஆடை ஏற்றுமதி, கடந்த மாதம் அக்டோபரில் 98.9 பில்லியன் அமெரிக்க டாலராக (21.16 சதவீதமும்) சரிவை கண்டுள்ளது. இதனால், வரும் மாதங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் (டீமா) கூறியதாவது: அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் மந்த நிலை தொடங்கிவிட்டது, இந்தியாவுக்கும் வந்துவிட்டதை ஆயத்த ஆடை ஏற்றுமதி காண்பிக்கிறது. இதற்கு முன்பு ஜிஎஸ்டி, கரோனா, பஞ்சு, நூல் விலையேற்றம், மூலப்பொருள் விலையேற்றம் என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததன் விளைவு இப்போது தெரிகிறது. தற்போது மத்திய அரசு இந்தியாவில் பொருளாதார மந்த நிலை இல்லை என கூறுகிறது, ஆனால், இந்தியாவில் தொழில் வளம் பாதிக்கப்பட்டு, மந்தநிலை தொடங்கியுள்ளதாக கருதுகிறோம்.
கடந்த ஆண்டு செப்டம்பரையும், நடப்பாண்டு செப்டம்பரையும் ஒப்பிட்டால் ரூ.1,014 கோடியும், அக்டோபரில் ரூ.1,257 கோடியும் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து, ஆயத்த ஆடை தொழில், தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டிலிருந்தே இந்த நெருக்கடி நிலை பின்னலாடைத் தொழிலுக்கு தொடங்கிவிட்டது. அதன் உச்சகட்டநிலை இப்போது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT