Published : 19 Nov 2022 07:31 AM
Last Updated : 19 Nov 2022 07:31 AM
தாம்பரம்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர் அலட்சியத்தால், பச்சிளம் குழந்தை இறந்ததாக கூறி, குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியில் இரட்டை மலை சீனிவாசன் தெருவில் வசிப்பவர் பாரதி(எ) மகேந்திரன். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி என்கிற ஆஷா, இரண்டாவது பிரவசத்துக்காக, குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், கடந்த 15-ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. இதனால், மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜி.எஸ்.டி சாலையில் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி குழந்தையின் தந்தை மகேந்திரன், குரோம்பேட்டை போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
இதுகுறித்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல் கூறியதாவது: மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குரோம்பேட்டை மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT